சுதந்திரக் கட்சிக்குள் பதற்றம்!

எதிர்காலத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“எந்த சிறிய கட்சியின் பெயரிலோ அல்லது சின்னத்திலேயோ எமது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடாது. கட்சியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க முடியாது.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 9 வீதம் வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவசியமெனில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து போட்டியிட முடியும். அதனை கவனத்தில் கொள்ள எமது கட்சி தயாராக இருக்கின்றது.

அனைத்து தரப்பினருக்கும் எமது கட்சி திறந்தே உள்ளது. எமது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எமது ஒரே நிபந்தனை” எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அடுத்த தேர்தல்களில் தமது கட்சி மற்றும் சின்னத்தில் போட்டியிடுவர் என எடுத்துள்ள தீர்மானம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது எடுத்துள்ள தீர்மானம் காரணமாக எதிர்காலத்தில் கட்சியினரை சந்திக்க மட்டுமல்ல வீதியில் இறங்கி நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் இணைந்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் வழங்கிய அரசியல் கயிற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பட்டபகலில் விழுங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியினரில் பெரும்பாலானோர் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே மகிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி பிரதமராக நியமித்த 2 வாரங்களுக்கு முன்னர், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியிட ஐக்கிய தேசியக்கட்சி வாய்ப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதிகளான லசந்த அழகியவண்ண மற்றும் மகிந்த அமரவீர ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இந்த பேச்சுவார்த்தையில் மங்கள சமரவீர மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துக்கொண்டிருந்துடன் ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த தயாரில்லை என கூறியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை நடந்து 2 வாரங்கள் செல்லும் முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளதாக பேசப்படுகிறது.

எவ்வாறாயினும் தமது கட்சி மற்றும் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்துள்ள தீர்மானம் காரணமாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


#Battaramulla   #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.