சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குமாறு சிவசேனா கடிதம்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம்.ஏ.சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு, சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.


வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும் போது, ஜனாதிபதியை “நீ” என விளித்து ஒருமையில் உரையாற்றி இருந்தார்.

அந்நிலையில் சுமந்திரன் அவ்வாறு ஒருமையில் ஜனாதிபதியை விளித்து உரையாற்றியதை ஏற்க முடியாதெனவும் அதனால் அவரை தமிழரசு கட்சியில் இருந்து நீக்குமாறும் இன்று (செவ்வாய்க்கிழமை) கடிதமொன்றை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு மறவன் புலவு சச்சிதானந்தன் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “தமிழர் சார்பாளர் ஒருவர் சினந்து வெறுப்பைச் சிந்தியாவாறு, பெரும்பான்மை தலைமைச் சார்பாளரை நீ என விளித்தல் தமிழரின் மரபல்ல.

அந்தவகையில் முதிர்ச்சியற்ற வெறுப்பைத் தூண்டும் பேச்சு. ஆற்றாமையின் உச்ச வெளிப்பாடு. மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன், முன்பும் அவுஸ்திரேலியாவில் நிகழ்த்திய பேச்சு ஒன்றுக்காக சுமந்திரனைக் கண்டித்தார். ஆனால் தற்போது இத்தகைய உரையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

1960 மற்றும் 1971ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற தேர்தல் காலங்களில், தமிழரசுக் கட்சியின் சிலரின் இவ்வாறான பொறுப்பற்ற உரையினால் பெரும்பான்மை மக்கள் தமக்குத் தாமே தமிழர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைத்தார்கள்.

இவ்வாறு பெரும்பான்மை மக்களை ஒன்றிணைத்து தமிழர் ஆதரவில்லாத ஆட்சியை 2018க்குப் பின்வரும் காலங்களில் நிகழ்த்துவார்களாயின் தமிழர்கள் நிச்சயம் நசுக்கப்படுவார்கள்.

இவ்வாறு தமிழரை நசுக்கும் ஆட்சியைத் தேர்ந்தெடுக்கச் சிங்களவரைத் தூண்டிய அமைச்சர் சுமந்திரனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் விலக்க வேண்டும்.” என அக்கடிதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #sumanthiran  #jaffna #Sivasene

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.