மடித்து பயன்படுத்தும் அலைபேசி விற்பனைக்கு வந்தது!

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.

சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும், கேமிங் பிரியர்களின் பயன்பாட்டை தாக்குப்பிடிக்கும் வகையில் ஸ்னாப்ட்ராகன் நிறுவனத்தின் சமீபத்திய 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பாட்டெரி ஆகியவற்றுடன் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“சாதாரண திறன்பேசியுடன் ஒப்பிடும்போது எங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்” என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியுள்ளார்.

எவ்வித பயமும் இன்றி குறைந்தது 20,000 முறை இந்த திறன்பேசியை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நம்பிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திறன்பேசிகளை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த திறன்பேசியின் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.