வழக்கிலிருந்து விடுவிக்க நிர்மலா தேவி மனு!

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்துவரும் வழக்கில், தங்களை விடுவிக்கக் கோரி நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று (நவம்பர் 8) நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.


அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக செல்போன் ஆடியோ வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மத்தியச் சிறையில் இருந்துவரும் இவர்கள், 7 முறை ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட இவர்களது ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை, தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று முதல் இந்த வழக்கு விசாரணை தினமும் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். விசாரணையின்போது, மூவரின் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் தனித்தனியாக மனுதாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கான போதிய முகாந்திரம் இல்லை என்றும், அதனால் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, வரும் 12ஆம் தேதியன்று மூவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

ஏற்கனவே நடந்த விசாரணையின்போது, முருகனும் கருப்பசாமியும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். நிர்மலா தேவி அளித்ததாக ஊடகங்களில் வெளியான வாக்குமூலத்தில் உண்மையில்லை என்று தெரிவித்தனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, நிர்மலா தேவி தனது தரப்பு கருத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று செய்தியாளர்கள் பல கேள்விகளைக் கேட்டபோதும், அவர் எதுவும் பேசவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

No comments

Powered by Blogger.