ராகுல் காந்தி குற்றச்சாட்டு ரபேல் ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் தரவில்லை

‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
குற்றம்சாட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதை மத்திய பாஜ அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் நேற்று முன்தினம் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், `பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் அந்த அரசு இந்தியாவுக்கு ஒப்புதல் கடிதம் ஒன்றை அளித்துள்ளது. அது அரசின் உத்தரவாதம் என்பதற்கு போதுமானது' என்று தெரிவித்தார்.

இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ரபேல் ஒப்பந்தம் இரு அரசுகள் இடையேயான ஒப்பந்தம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் நாட்டு அரசு உத்தரவாத கடிதம் எதையும் தரவில்லை. அந்த அரசு அளித்துள்ள ஒப்புதல் கடிதம் ரபேல் ஒப்பந்த உத்தரவாதத்திற்கு போதுமானதல்ல. இதை எப்படி அரசுகள் இடையேயான ஒப்பந்தம் என்று ஏற்க முடியும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘` கமிஷனும், ஊழலும் நடைபெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்புத் துறை ஊழலான ரபேல் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்’'என வலியுறுத்தினார்.
Powered by Blogger.