நதிகளைஇணைக்க தாக்கல் செய்யப்பட்ட மணு தள்ளுபடி!

தமிழ்நாட்டில் கடுமையாகத் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை அடிப்படையில் நதிகளைஇணைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். “வானிலைஆய்வு மைய அறிக்கைபடி தமிழகத்தில் மழை 70 சதவீதம் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் ஏரி, குளம், கிணறுகள் வறண்டுநிலத்தடி நீர்மட்டம் 85% குறைந்து விட்டது. காவிரி டெல்டா விவசாயம் 75 சதவீதமும், கிணறு மற்றும் குளங்களை நம்பிவிவசாயம் செய்வது 90 சதவீதமும் குறைந்து விட்டது. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை 33.7 சதவீதமும், வடகிழக்குப்பருவமழை 61 சதவீதமும் குறைந்துள்ளது.

சமீபத்தில் கர்நாடகாவில் பெய்த பெருமழையால் மேட்டூர் அணை நிரம்பினாலும், கடைமடை விவசாயிகளின் பாசனத்துக்கு நீர்சென்றடையவில்லை. இதற்கு நீர்வழிப் பாதைகளில் தொடரும் ஆக்கிரமிப்புகளே காரணம். 2018 நிதி ஆயோக் அறிக்கையின்படி,நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் 2020இல் தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்கள் கடுமையாகப்பாதிக்கப்படும். சென்னை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பெரும் தண்ணீர் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

அதனால், தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை நதிகளுடன் இணைக்க நிபுணர் குழு அமைக்கவும், நதிகளின் குறுக்கே சிறு தடுப்பணைகள் கட்டவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், இந்தப் பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கவும் மத்திய அரசுக்குஉத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கே.கே.ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று (நவம்பர் 14) இந்த மனுவிசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது எனக் கூறி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

Powered by Blogger.