சம்பந்தன் திரைமறைவில் நடந்த ரகசியம் என்ன??

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை கட்டுப்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கடந்த சில வாரங்களாக இலங்கையில் ஏற்பட்ட அரசியல் புரட்சி காரணமாக வன்முறைகள் வெடிக்கும் அபாய நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பதற்றம் தற்போது தணிந்துள்ளதாக தெரிய வருகிறது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை, நீதித்துறைக்கான யுத்தமாக மாறியிருந்தது.

அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில் உள்நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தது.

சரியான நேரத்தில் நேர்த்தியான அணுகுமுறை மூலம் மைத்திரி – ரணில் முறுகல் நிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தீர்வு கண்டுள்ளார்.

அரசியல் யாப்புக்கு முரணான வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

இந்த நடவடிக்கை அரசியல் மட்டத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியதுடன் சர்வதேச வரை அதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்து மஹிந்தவின் பிரதமர் பதவியை தக்க வைக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தை அதிரடியாக கலைத்திருந்தார். எனினும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதிக்கு எதிராக 17 மனுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா சம்பந்தனே முதலில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது சிறப்பம்சம்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கனகேஸ்வரன் ஆகியோர் வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியினர் தோல்வி நிலையினை எதிர்கொண்டிருந்த போது, வழக்கினை தாக்கல் தீவிர முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் வெளியானதுடன், நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவியேற்பார் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.

அவ்வாறு ரணில் மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதியை பழிவாங்கும் நடவடிக்கையாக அவருக்கு எதிராக குற்ற பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் தாக்கல் செய்து, பதவியில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் காரணமாக பாரிய அச்ச நிலையை கொண்டிருந்த ஜனாதிபதி, தனது நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த இரா சம்பந்தன், சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்.

ரணில் தரப்பினால் ஜனாதிபதியின் பதவிக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியை சம்மந்தன் வழங்கியுள்ளார். இதற்கான இணப்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடன் எட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்காது, அவருக்கு பதிலாக கட்சி்யின் உபதலைவர் சஜித் பிரேமதாஸவை நிறுத்த வேண்டும் என கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க, பிரதமராக சஜித பிரேமதாஸவை தெரிவு செய்ய இணக்கம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதியை பதவியில் இருந்து வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கியுள்ளார்.

சாணக்கியமான முறையில் செயற்பட்ட சம்பந்தன் தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையை தணித்து, இருதரப்பினருக்கும் இடையில் நட்புறவினை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்காரணமாக அடுத்து வரும் நாட்களில் மைத்திரி – ரணில் இணைந்து அரசாங்கத்தை கொண்டு செல்வாா்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரு தரப்பினருக்கும் இடையிலான உடன்பாடுகளை எட்டுவதில் சில சர்வதேச நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Sampanthan #இலங்கை #யாழ்ப்பாணம் #வடமாகாணம்

No comments

Powered by Blogger.