ஆளுநர் விருப்பமில்லாமல் இருக்கிறார்!

ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் விருப்பமில்லாமல் இருக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

ஈரோட்டில் இன்று (நவம்பர் 7) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “உச்ச நீதிமன்றம் ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பளித்துவிட்டது. தமிழக அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டது. அதன்படி சட்டப்பிரிவு 161இன்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டியதுதான் மனிதாபிமான கடமை. ஆனாலும் ஆளுநர் விடுதலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கிறார். மற்றொரு தரப்பினர் வழக்கு போட்டுள்ளனர் என்று ஆளுநர் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

பட்டாசு வழக்குகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “காலம் காலமாக நாள் முழுக்க பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது ஆர்வ மிகுதியில் சில இடங்களில் நேரம் கடந்து பட்டாசு வெடித்திருக்கலாம். அவர்களை எச்சரித்து அனுப்பியிருப்பதை விடுத்து வழக்குப் போடுவது, கைது செய்வது என்பதெல்லாம் தவறானதாகும்” என்று விமர்சித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.