பாடு நிலாவே பாகம் 3



அப்போது அவன் தரம் 9இல்
படித்துக்கொண்டிருந்தான். அவர்களின் வீட்டிற்கு அருகில்தான் ‘மண்டபம் இலங்கை அகதிகள் முகாம்’ இருந்தது. தீப்பெட்டித் தொழிற்சாலையில் மேலதிகாரியாகப் பணிபுரியும் அவனது தந்தை அந்த முகாமிலுள்ள பெண்களிடம் தீப்பெட்டியில் குச்சிகளைப் போடும் பணியை கொடுக்கவும் அதற்கான பணப்பட்டுவாடாவிற்காகவும் அங்கே செல்லும் போது பல தருணங்களில் அவனும் கூடவே சென்றிருக்கிறான். அதன் பின்னர் அவனே கமிஷன் பணத்தினைக் கொடுக்கச் செல்வதும் உண்டு. இப்படித்தான் அந்த முகாமிற்கும் அவனுக்குமான ஆரம்பத்தொடர்பு உண்டானது. 
அன்றொரு நாள், அவன் கமிஷன் கொடுக்கச்செல்லும் போது, அதிகமான மக்கள், உலர்ந்த தலையும், ஒட்டிய கண்களும் காய்ந்த கன்னமும் கண்ணீர் தழும்பிய விழிகளுமாய் வரிசையில் நிற்பதைக் கண்டான். அவ்வேளை, அந்த வரிசையில் தான் சாதனாவை அவன் முதல்முதலாக கண்டான். மான்குட்டி போல மருண்டு மருண்டு விழித்த கூர்விழிகள், அந்த விழிகளுக்குள் நிறைந்துகிடந்த ஏக்கம், படிய வாரிச்சீவிய ஒற்றைப்பின்னல், பல நாட்கள் கடந்துவிட்ட அழுக்கான சட்டை, ஒருவித கடினம் குடிகொண்ட உதடுகள், என அவள் காங்கேசனின் குழந்தை மனதில் சட்டென ஒட்டிக்கொண்டாள். அவளருகில் கையில் கட்டுகளுடன் நின்ற பெரியவரே அவளது அப்பா என்பதை பின்னர் அறிந்துகொண்டான். தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் தனது வேலைகளில் மூழ்கிப்போனான்.
மறுநாள் வழமைபோல பாடசாலை சென்றவன் அங்கு மறுதடவை அவளைக் கண்டான். முகாம் அதிகாரியின் பணிப்பில் அனுப்பப்பட்டிருந்த அவள், அவனது வகுப்பில்தான், சேர்க்கப்பட்டாள். அவள் மிகுந்த கெட்டிக்காரி என முகாம் அதிகாரி ஆசிரியரிடம் ஆங்கிலத்தில் சொன்னது அவனுக்கும் புரிந்தது. நாட்கள் சில ஓடிச்சென்றன. பரீட்சைகள் ஆரம்பமாயின. எப்போதும் வகுப்பில் முதல் மாணவனான காங்கேசனை பின்னுக்குத்தள்ளி அவனது இடத்தை சாதனா பிடித்துக்கொண்டது அவனுக்குள் அவள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. ஒரு பெண் முன்னிலையில் நிற்கிறாள் என்றால் வீழ்த்திவிட திட்டங்கள் பிறப்பது இயல்புதானே, காங்கேசன் மட்டுமென்ன விதிவிலக்கா?
ஆசிரியர்களிடம் அவளுக்கிருக்கும் மரியாதையை உடைக்க எண்ணிய நண்பர்கள் குழாம் திட்டமொன்றை வகுத்தது, தமது வயதிற்கேற்றபடி.
“எங்கள் நாட்டிற்கு அகதியாக வந்தவள் எங்களை விட முன்னிலையில் வருவதா? எங்கள் இடத்தை எப்படி அவள் பிடிக்கலாம், அவளை அழவைத்தே ஆகவேண்டும்” கேள்விகள் மாறிமாறிப் பிறக்க, பதிலும் சூடாக வந்துவிட, கூடிப்பேசியே திட்டத்தை போட்டனர்.
மறுநாள் உணவு இடைவேளையில் மாணவர்கள் வெளியே சென்ற போது அவளது பாடக்கொப்பியை எடுத்து ஒளித்துவிட்டனர். அடுத்து அந்தப் பாடம்தான், ஆசிரியர் வந்தார், அவர் கடுமையான கோபக்காரர். வகுப்பு ஆரம்பித்தது, சாதனா பரபரப்பாக கொப்பியைத் தேடுவதை கண்டதும் அவனும் நண்பர்களும் மௌனமாகச் சிரித்துக்கொண்டனர். எவ்வளவு தேடியும் கொப்பி கிடைக்காததால் அவளது அழகு வதனம் கூம்பிக்கொண்டது, அங்கும் இங்கும் திகைத்தபடி பார்த்த அவள், தனது கொப்பியைக் காணவில்லை என்பதை ஆசிரியரிடம் கூற மிகவும் கண்டிப்பான அவர் அவளை வகுப்பிற்கு வெளியே செல்லுமாறு கூறிவிட்டார்.
ஒரு நொடி காங்கேசனின் உள்ளம் அவனைச் சுட்டபோதும், “ ம்---தேவைதான், தங்கட நாட்டில இருக்காம இங்க எதுக்கு வரணும், அதவிட என்னை மிஞ்ச நினைச்சா இதுதான் தண்டனை,” என தனக்குத்தானே கூறி தன்னைத் தேற்றிக்கொண்டான். கண்களில் நிறைந்த கண்ணீரை அடக்க சாதனா அரும்பாடுபட்டபோதும் அவளது விழிகளில் அருவியாய் கொட்டிய கண்ணீரைக் கண்டதும் அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது.
மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான் காங்கேசன், அவனது பெயரைச்சொல்லி அழைத்தபடி பின்னாலேயே ஓடிவந்தாள் சாதனா.
“என்ன?” என்றான் அதட்டலாக.
“ என்ர--- என்ர, கொப்பியை நீங்கள்தான் எடுத்தனீங்கள், எனக்குத் தெரியும், தயவுசெய்து கொப்பியைத் தாங்கோ” என்றாள், கெஞ்சும் குரலில்.
ஒருகணம் திகைத்து, மறுகணம், “உனக்கென்ன பைத்தியமா?” என்றான்.
“இல்லை, நான் சொல்லுறது உண்மை, நீங்கள் என்ர மேசைக்குப் பக்கத்தில நிண்டதை நான் கண்டனான், உங்களைக் காட்டிக்குடுக்க எனக்கு விருப்பம் இல்ல, கொப்பியை மட்டும் தாங்கோ” என்றாள்.
மௌனமாக நின்றவனிடம், “நாங்கள் இதைவிட பெரிய அடிகளை எல்லாம் தாங்கிவந்திட்டம், எங்களை மாதிரி நீங்கள் அனுபவிக்கயில்லை, அப்பிடி வரவும் கூடாது, எனக்கு இதெல்லாம் பெரிய வலியில்லை” என்றவள், அவனை நேராய்ப் பார்த்து
“நாங்கள் எங்கட மண்ணைவிட்டு விருப்பத்தோட வரவில்லை, வாழமுடியாமல் தான் வந்திருக்கிறம், சொந்த மண்ணை, கூடிவாழ்ந்த உறவுகளை, எங்களுக்கான தனித்துவங்களை எல்லாத்தையும் விட்டு, அறிவை மட்டும்தான் கையில கொண்டு வந்திருக்கிறன், திரும்ப எங்கட மண்ணுக்குப் போகேக்க அதுதான் எங்கட மூலதனம், தயவுசெய்து அத மட்டும் பறிக்க நினைக்காதேங்கோ” என்றபடி துயரம் தோய்ந்த குரலில் யாசித்த அவளிடம் அவன் எதைக் கண்டானோ, அவனுக்குள் இருந்த மடத்தனம் மெல்ல மெல்ல உடைந்தது. அவள் மிக உயரமாய் அவன் கண்ணுக்குத் தெரிந்தாள்.
“சாதனா ---சாதனா” அவன் உதடுகள் ஓயாமல் உச்சரித்தது.
தொடரும்
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.