கடந்தகால திருடர்களை பிடிக்க ஜனாதிபதி உதவுவார்!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய ஜனாதிபதி உதவுவாரென நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நாட்டில் 50 நாட்களுக்குப் பின்னர், ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் மீண்டும் சக்திமிக்கதாக மாற்றமடைந்துள்ளது.

இதற்கு ஒத்துழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நாம் மீண்டும் எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம். தற்போது புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

அடுத்துவரும் காலங்களில் மூன்று தேர்தல்களுக்கும் நாம் முகங்கொடுக்கவுள்ளோம். அவற்றில் இரண்டு தேர்தல்கள் அரசாங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாகவும் அமைந்துள்ளன. இதற்கிணங்க நாம் அடுத்தகட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும், கடந்த அரசாங்கத்தின் திருடர்களை பிடிக்கவில்லை என்றே எம்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்வகையில், நாம் இந்த விடயத்தில் இனிமேல் துரிதமாக செயற்படவுள்ளோம்.

இந்த பயணத்துக்கு ஜனாதிபதியும் தனது ஒத்துழைப்புக்களை வழங்குவாரென நாம் நம்புகிறோம். அவரது கடந்தகால செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்கள். நீதிமன்றமும் எதிராக தீர்ப்பளித்துள்ளது.

எனவே, இனிமேலாவது இவற்றை உணர்ந்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென நாம் கேட்டுக்கொள்கிறோம். சிறப்பான ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெற்று அவர் செயற்பட வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.