புத்தாண்டில் பல சவால்களை எதிர்நோக்க நேரிடும்


இடைக்கால கணக்கறிக்கையை நிறைவேற்றிக் கொள்ளாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில், இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”50 நாட்களாக எமது நாட்டில் சட்டரீதியான அரசாங்கமோ, நீதியமைச்சரோ, அமைச்சரவையோ இருக்கவில்லை. இவ்வாறான சிக்கல்களுக்கு மத்தியில் தான் நாம் இந்நாட்டை இழுத்துக்கொண்டுச் சென்றிருந்தோம்.

இந்நிலையில், இடைக்கால கணக்கறிக்கையை நாம் நிறைவேற்றிக்கொள்ளாவிட்டால், நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும்.

மஹிந்த தரப்பினர் அரசியலமைப்பை மீறி செயற்பட்டார்கள் என்பதை நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றின் ஊடாக நாம் நிறைவேற்றியுள்ளோம்.

அவர்களின் செயற்பாட்டால் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது. இது நீடித்திருந்தால் ஆர்ஜன்டீனா மற்றும் கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியை விட பாரிய நெருக்கடிக்கு நாம் முகம் கொடுக்க நேரிட்டிருக்கும்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை இவ்வருடம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவிருந்தோம். ஆனால், நாட்டில் இடம்பெற்ற சூழ்ச்சியால் முடியாது போய்விட்டது. எவ்வாறாயினும், அதனை நாம் அடுத்த வருடம் அதேபோன்று சமர்ப்பிக்கவுள்ளோம்.

இதனாலேயே எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாம் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பித்தோம். இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன.

எனவே, இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை அனைத்துத் தரப்பும் வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.