கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கை: மீனவர்கள் போராட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த டிசம்பர் 17ஆம் தேதியன்று மெரினா கடற்கரையைப் பராமரிப்பது தொடர்பான வழக்கில், ஒரு மாத காலம் சென்னை காவல் ஆணையருடன் மாநகராட்சி ஆணையர் நடைபயிற்சி மேற்கொண்டு கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதன்படி மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மெரினா கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளைப் பார்வையிடுவதாகச் செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில் நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான மெரினா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள மீன் கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியானது. பட்டினப்பாக்கம் அருகேயுள்ள துறைமுகப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்துத் தரப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள்.
மீன் கடைகள் அகற்றப்படுவதைக் கண்டித்து, இன்று (டிசம்பர் 21) காலையில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் பல ஆண்டுகளாகக் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்குப் பாதிப்பில்லாமல் வியாபாரம் செய்வோம் என்றும் மீனவர்கள் கூறினர்.
மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் போலீசார். இதில் உடன்பாடு எட்டப்படாததால் மீனவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.