234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள்: கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அண்மையில் நடந்துமுடிந்த செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திப்போம் என்றும், தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார். மேலும், பல்வேறு துறைகளின் ஆலோசனைகள் அவசியம் என கருதிய கமல்ஹாசன், துறை சார்ந்த நிபுணர்களையும் கட்சியில் இணைத்துவருகிறார்.
இந்த நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கமல்ஹாசன் ஒப்புதலுடன் 575 க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றிவருகிறது. புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி தெளிவாகவும் நேர்மையாகவும் தொலைநோக்கு பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும் தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்றுவருகிறோம். அந்த வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
“வழங்கப்படுவது பதவியல்ல, பொறுப்பு என்று பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பல முறை பல தருணங்களில் கூறியிருக்கிறேன். எனவே அதனை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும் செவியாகவும் குரலாகவும் செயல்பட வேண்டும்” என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தியுள்ள கமல்ஹாசன், பொறுப்பினை சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல் மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் கமல்ஹாசன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.