பாடு நிலாவே பாகம் 9


நாட்கள் மெல்ல நகர்ந்து வாரங்கள் இரண்டை விழுங்கிக்கொண்டது. நாள் தவறாது காலையும் மாலையும் சாதனாவிடம் வந்துவிடுவான் காங்கேசன். விதவிதமான உணவுப் பொருட்களை அவளுக்காக மட்டுமல்லாது அங்கிருந்து அனைவருக்கும் சேர்த்து வாங்கிவந்துவிடுவான். சாதனா எவ்வளவோ சொன்னபோதும் அவன் கேட்பதில்லை. அவன் வருகிறான் என்பதை அவனது காலடி ஓசையை வைத்தே கண்டுகொள்வாள் சாதனா. இப்போது அங்கே, அவன், அனைவருக்கும் தெரிந்தவனாகி விட்டதால் வந்துபோகும் உரிமையும் கிடைத்திருந்தது. அன்றும் மாலையில், சாதனாவைப் பார்ப்பதற்காக வந்திருந்தான் காங்கேசன்.

அவளருகில் அமர்ந்தவன் “சா –தனா? ” என்றான்.
“என்னடா?” அவள் பதிலாகக்கேட்க,
“நான் இங்கேயே இருந்திடவா?” என்றான்.
“வேண்டாம்---வேண்டாம், அப்பாவும் அம்மாவும் என்னைத்தான் திட்டுவினம், இந்த பதினைஞ்சுநாள் சந்தோசம் எனக்கு வாழ்க்கை முழுமைக்கும் போதும்,” என்றாள். எதுவும் சொல்லாமல் கதைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.

மாலையில் மீண்டும் வந்தவன், “ சாது—இந்த பதினைஞ்சு நாள் சந்தோசம் உனக்குப் போதுமானதா இருக்கலாம், ஆனா எனக்கு அப்பிடிகிடையாது, உனக்குத் துணையா வாழ்க்கை பூரா ----“ அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“காங்கேசன்” ஆத்திரமாய் வந்தது அவளது வார்த்தைகள். சட்டென்று தானே தணிந்து போனாள்.
“காரு நீ எந்த அர்த்தத்தில் இப்பிடிச் சொல்லுறியோ எனக்குத் தெரியாது, ஆனா எதுவா இருந்தாலும் தள்ளி நிக்கிறவரைதான் அன்பு, உரிமை என்று ஆகிவிட்டால் பாசம், அன்பு, நட்பு எல்லாமே செத்துப் போயிடும். ஒருத்தருக்கு ஒருத்தர் விரோதியாத்தான் தெரியும், இப்ப ஏதோ ஒரு இரக்கத்தில இப்பிடிச் சொல்லுறாய், காலம் ஓட வாழ்க்கையே நரகமாயிடும், தயவுசெய்து இனி இந்தப்பேச்சே வேண்டாம்” என்றாள்.
“சரி—சரி---கோபப்படாதே, நான் நாளைக்கே புறப்படணும், சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன், போயிட்டு வரவா” என்றான்.
மௌனமாய் தலையை மட்டும் ஆட்டினாள் சாதனா.
அவன் நடந்தான்.

கைகளால் அருகில் துளாவிய சாதனா அவன் இல்லை என்பதை உறுதிசெய்தபடி நிமிர்ந்து அமர்ந்தாள். தாங்கமுடியாது கேவலாய் வெளிப்பட்டது துக்கம். கைகளுக்குள் முகம் புதைத்தவள், கேவிக்கேவி அழத்தொடங்கினாள். மெல்ல மறைவில் இருந்து எட்டிப்பார்த்த காங்கேசன் அவளது அழுகையை நிறுத்த விரும்பாது தன் கண்களைத் துடைத்தபடி வெளியேறினான்.

வெளியே வந்தவனைக் கண்ட இசையாளன், “ என்னடா மச்சி, பயங்கரமான யோசனையா? ஆனா உன் முகத்தைப் பாத்தா சந்தோசமா இருக்கே” என்றான்.
“ஆமாடா---சந்தோசமான யோசனைதான்”
“அப்பிடி என்னடா சந்தோசமான யோசனை, அதுவும் எனக்குத் தெரியாம?
“சாதனா எப்பிடி அழுதா தெரியுமாடா, அதுவும் குலுங்கி குலுங்கி” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான் காங்கேசன்.

“டேய், சாதனா அழுததுக்கா இப்பிடிச் சிரிக்கிறாய், உனக்குத்தான் அவ அழுதா தாங்கமுடியாதேடா?

“உண்மைதான், அவ அழுதா நான் தாங்கிக்கமுடியாது தான், ஆனா இப்ப அவ அழுறது என்னோட பிரிவை நினைச்சுத்தானே, அதான் சந்தோசமா இருக்கு, நான் பக்கத்தில இருக்கணும்ற ஆசை அவளுக்கு இருக்குடா, ஆனா மறைக்கிறா”

“பலே கில்லாடிதான்டா நீ” செல்லமாய் வயிற்றில் குத்தினான் இசையாளன்.

“நாங்க புறப்படுவோம், நானில்லாத தவிப்பை அவ புரியணும், ரெண்டு நாள் உங்க வீட்டுக்குப்போயிட்டு வந்திடலாம்” என்றான் காங்கேசன்.
தலையை அசைத்தான் இசையாளன்.

ஹற்றன் நகரில் குடாஓயாவில் இசையாளனின் வீட்டில் அனைவரோடும் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தான் காங்கேசன். காரணமே இல்லாமல் சிரிப்பு வந்தது அவனுக்கு. முகம் ஆயிரம் வோல்ரேஜ் பவரில் பளிங்கு போல மின்னியது.
“மகனே, என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல,” என்றார் இசையாளனின் அப்பா.
“அப்பா ----“ புன்னகைத்தான் காங்கேசன்.
“அன்னிக்கு பாத்தததைவிட ரொம்ப சந்தோசமா இருக்கிறாப்போல இருக்கு, போன காரியம் முழுசா வெற்றிதான் போல” என்றார்.


“ஆமாப்பா ---“ என்றான் இசையாளன்.

“அப்படியா, ரொம்ப மகிழ்ச்சி மகனே, எல்லாம் நல்லதா நடக்கட்டும் ” ஆசீர்வதித்தார் இசையாளனின் அன்னை.

நண்பனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் காங்கேசன். இதயமமெங்கும் மகிழ்வின் அலைகள் ஆர்ப்பரித்தது, என் தேவதை அவள், அவளின் பாதியாய் நான் வாழவேண்டும். மனம் முணுமுணுத்தது காங்கேசனுக்குள்ளே.

தொடரும்.

No comments

Powered by Blogger.