செமட்ட செவன திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் இலகுக் கடன் வசதி!

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் அரச வங்கிகளினூடாக மிகக்குறைந்த வட்டிவீத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இலகு கடன் வழங்கி வைக்கப்படவுள்ளதாக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்டப்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள செமட்ட செவன வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் 8 திட்டங்கள் இதுவரையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 50 நாட்கள் நாட்டில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட குழப்பகரமான சூழல் காரணமாக இத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது இவ்வீட்டுத் திட்டத்தின் வேலைகள் அனைத்தும் துரிதப்பட்டுள்ளது.

இவ்வீட்டுத்திட்டத்தில் வீதி வசதிகள், நீர்வசதிகள், மின்சார வசதிகள், உள்ளிட்ட பல வசதிகளும், இதில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன. இவ்வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, அரச வங்கிகளினூடாக மிகக்குறைந்த வட்டிவீத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலகு கடன்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இவ்வீட்டுத்திட்டத்தில் வீடுகள் மாத்திரமின்றி ஏனைய பல நன்மைகளும், இதில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு கிடைக்கவிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.