இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது கொலை வழக்கு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்று, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.


இது தொடர்பாக, சட்டமாஅதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.



எக்னெலிகொட காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னர், இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதுடன், காவல்துறையின் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாக, காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களாக, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இருக்கும் நிலையில், விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

“இராணுவத்தின் முழுமையான ஒத்துழைப்பு எமக்குக் கிடைக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது அவர்களால், இலகுவாக நடவடிக்கை எடுக்க முடியும்.

குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, கொலை வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையை நாம் கோரியுள்ளோம்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கை மேலும், விசாரிக்க இராணுவத்தின் உதவி தேவைப்பட்ட நிலையில், விசாரணைகள் நிறுத்தப்பட்டதாகவும், இராணுவத்தின் உதவியின்றி விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.



எனினும், இதுதொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கருத்து வெளியிடுகையில்,

“விசாரணைகளுக்கு சிறிலங்கா இராணுவம் உதவி வழங்கியது. எந்தவொரு இராணுவ அதிகாரிக்கும் எதிராக சாட்சியங்கள் இருந்தால் அவர்களுக்கு எதிராக இராணுவம் நடவடிக்கை எடுக்கும்.

எந்தவொரு சாட்சியமும் இல்லாமல் எந்தவொரு இராணுவ அதிகாரிக்கும் எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அவர்களைப் பாதுகாக்க இராணுவம் தனது சட்டப் பிரிவைப் பயன்படுத்தும்.” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.