ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகளின் ஆலோசனையை ஏற்று ஜாக்டோஜியோ அமைப்பினர் நாளை தொடங்குவதாக இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை 10ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாக இன்று (டிச-3)அறிவித்துள்ளனர்


பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பல போராட்டங்களை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாளையிலிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடைசியாக கடந்த வாரம் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் தமிழக அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நாளை நடத்தவிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞர் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார் . பின்னர் இன்னொரு வழக்கறிஞர் டி செல்வம் என்பவரும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இவர்கள் இருவருமே கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் மற்றும் மாணவர்களின் தேர்வு காலம் என்பதால் அவை தொடர்பான பணிகளும் பாதிக்கப்படும். எனவே போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இருவழக்குகளையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் .போராட்டத்தை வரும் 10 தேதி வரை தள்ளி வைக்க முடியுமா என்று ஜாக்டோஜியோ அமைப்பினரிடம் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நீதிபதிகளின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை 10ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக நீதிமன்றத்திடம் உறுதி மொழி அளித்தனர்.
Powered by Blogger.