நெல்லியடி பஸ் நிலையம்!

வடமராட்சியில் ஐனசந்தடி மிக்க பஸ் நிலையம் மட்டுமல்ல பல போராளிகள் ஆரம்ப காலங்களில் சங்கமித்த இடமும்
இந்த நெல்லியடி பஸ் நிலையமே.

1980களில் எமது இயக்கத்திற்கு ஆயுதம் சேகரிப்பதற்காக பொலிசாரின் ஆயுதங்களை பறிப்பதற்கு இதே பஸ் நிலையத்தில் காத்து நின்ற தருணங்கள் இன்றும் நினைவில் இருக்கிறது.
கரவெட்டி பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளினால் நெல்லியடி பிரதான பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்தை பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதேசத்திலுள்ள சக செயற்பட்டாளர்கள் பலர் கரவெட்டி பிரதேசசபை தவிசாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முயன்றபோதும், தவிசாளர் தம்முடன் நாகரிகமாக பேசவில்லையென பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

நெல்லியடி பிரதான பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடம் பொதுமக்களின் பாவனைக்குதவாத நிலைமையில் காணப்படுகிறது என கடந்த சில தினங்களின் முன்னர், சமூக ஊடகங்களில் படங்கள் வெளியாகியது. பலரும் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

நெல்லியடி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏன் இந்த அவலம் ஏற்பட்டது என்பதை அறிய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் பேசினோம்.

நெல்லியடி பேருந்து நிலைய மின்சார கட்டணத்தை இலங்கை போக்குவரத்துசபையின் பருத்தித்துறை சாலையே செலுத்தி வருகிறது. இதுவரையும் அண்ணளவாக சுமார் 600 ரூபாவே மாதாந்த கட்டணமாக செலுத்தப்பட்டு வந்தது. அண்மையில் பேருந்து தரிப்பிடத்தில், நெல்லியடி வர்த்தகரும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சி.அகிலதாஸ் மின்சார விளம்பர பதாகை ஒன்றை பொருத்தினார். அதில் அவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. அத்துடன் சிசிரிவி கமரா ஒன்றையும் தனது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பொருத்தினார். இரண்டும் பொருத்தப்பட்ட பின்னர், மாதாந்தம் சுமார் 3,000 ரூபா மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை, பருத்தித்துறை சாலைக்கு ஏற்பட்டது. இந்த அதிகரித்த கட்டணத்தை பருத்தித்துறை சாலை செலுத்தவில்லை.

மின் கட்டணம் செலுத்தப்படாமல், நிலுவைத் தொகை அதிகரித்த பின்னர், மின் இணைப்பை மின்சாரசபை துண்டித்துள்ளது. இதனால் பேருந்து நிலைய மலசல கூடத்திற்கு தண்ணீர் செல்லவில்லை.

இது தவிர, அந்த மலசலகூடங்கள் துப்பரவு செய்யப்படுவதில்லை. தினமும் காலையில் கரவெட்டி பிரதேசசபையின் துப்பரவு தொழிலாளர்கள் பேருந்து நிலைய பகுதியை துப்பரவு செய்தாலும், மலசலகூடத்தை சுத்தம் செய்வதில்லை.

கரவெட்டி பிரதேசசபையும் இதில் அக்கறை காண்பிப்பதில்லை.

இது தொடர்பாக அண்மையில் சிலர் முகநூலில் பதிவிட்டனர். இது கடுமையான விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்ததும், கரவெட்டி பிரதேசசபை தவிசாளரின் கீழ் பணியாற்றுபவர்களும், அவரது ஆதரவாளர்களும் முகநூலில் அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நெல்லியடி பேருந்து தரிப்பிடத்தை வீதி அபிவிருத்தி திணைக்களம் தனது பொறுப்பில் வைத்திருப்பதாகவும், அதை கரவெட்டி பிரதேசசபையிடம் ஒப்படைத்தால் இந்த பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வோம் என்றும் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். கரவெட்டி பிரதேசசபை தவிசாளரும், நெல்லியடி பேருந்து நிலையம் தமது பொறுப்பில் இல்லையென முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.



எனினும், இந்த வருடம் பெப்ரவரி 06ம் திகதியே, வீதி அபிவிருத்தி திணைக்களத்தால், நெல்லியடி பேருந்து தரிப்ர் நிலையம், கரவெட்டி பிரதேசசபை செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு விட்டது. அதற்கான ஆவணங்களும் உள்ளன. இந்த தகவலை தமிழ்பக்கம் உறுதிசெய்தது.

சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பகிரப்பட தொடங்கியதும், நெல்லியடியிலுள்ள பிரமுகர்கள் சிலர், கரவெட்டி பிரதேசசபை தவிசாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தம்மை அவமானப்படுத்தும் விதமாக தவசாளர் நடந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். “இந்த விசயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்“ என தவிசாளர் தன்னிடம் கூறியதாக பிரமுகர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மலசலகூடத்தால் கரவெட்டி பிரதேசசபைக்கு நாளாந்தம் 300 ரூபா மாத்திரமே வருமானம் வருகிறது, பராமரிப்பாளர் ஒருவரை நியமித்தால் 2,000 ரூபா செலவாகிறது, அதனால் பராமரிப்பு பணியை நிறுத்தி விட்டோம் என தவிசாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலசலகூடத்தை பராமரிப்பது, அந்த மலசலகூடத்தில் வரும் வருமானத்தில் அல்ல, அது சபையின் நிர்வாக நடவடிக்கை என ஆர்வலர்கள் வலியுறுத்திய போதும், தவிசாளர் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைத்திருக்கவில்லை.

இன்று காலை (07) வரை, நெல்லியடி பேருந்து தரிப்பிடம் தமது பொறுப்பில் இல்லையென்றே தவிசாளர் தரப்பு மற்றும் நிர்வாகத்திலிருந்தவர்கள் பொய் கூறி வந்தனர். எனினும், அது கடந்த பெப்ரவரி மாதமே கரவெட்டி பிரதேசசபையிடம் கையளிக்கப்பட்ட நிர்வாகரீதியான ஆவணங்கள் உள்ளன.

 கரவெட்டி பிரதேசசபை இந்த விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டதையடுத்து, அந்த பகுதி சிவில் செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை சாலைக்கு நேரில் சென்று, முகாமையாளருடன் பேச்சு நடத்தியிருந்தனர். இதையடுத்து, சிசிரிவி கமரா மற்றும் இலத்திரனியில் விளம்பர பலகை தவிர்ந்த வழக்கமான தேவைக்கான மின்சார இணைப்பை பருத்தித்துறை சாலை வழங்கியுள்ளது. மலசலகூடத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, நீரிறைக்கும் இயந்திரத்திரத்திற்கான மின் இணைப்பையும் பருத்தித்துறை சாலை வழங்க சம்மதித்துள்ளது.

நெல்லியடி சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடமே, தமது பொறுப்பில் உள்ளதென்பதை கரவெட்டி பிரதேசசபை அறிந்திருக்கவில்லையா என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்துள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.