பிரியாவை தமிழுக்கு அழைத்து வந்த கதை!

தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் அதே கூட்டணியில் அதிகளவில் உருவாகி வருகின்றன. ரஜினி, கமல்
உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதைய டிரெண்ட் இதுவாக இருப்பதால் அறிமுக இயக்குநர்களும் தங்களது படங்களை வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் பணியாற்றியவர்கள் ஒன்றிரண்டு பேர் படக்குழுவுடன் இணைந்தோ அல்லது புதிய அணி உருவாகியோ இந்தப் படங்களை உருவாக்குகின்றனர். மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான 'சித்திரம் பேசுதடி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ராஜன் மாதவ் இயக்குகிறார். இவர் 2011ஆம் ஆண்டு சேரன், பிரசன்னா இணைந்து நடித்த 'முரண்' படத்தை இயக்கியவர். 'சித்திரம் பேசுதடி - 2' படத்தின் ட்ரெய்லரை விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.
வெவ்வேறு இடங்களில் நடைபெறும் கதைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது உருவாகும் திருப்பங்களும் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அந்தப் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் மூன்று ஜோடிகள் நடித்துள்ளனர். கபாலி படத்தின் நாயகி ராதிகா ஆப்தே அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கிறார். காயத்ரியும் நந்தனும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்த பிரியா பானர்ஜி இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஜ்மல் நடிக்கிறார். விதார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் வழக்கமான கமர்ஷியல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த பிரியா பானர்ஜி இந்தப் படத்தின் கதை பிடித்துப் போக நடிக்கச் சம்மதித்துள்ளார். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது அலுப்பு தட்ட ஒரு மாற்றத்திற்காக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையைச் சுற்றி நடைபெற்றுள்ளது. குறிப்பாகச் சென்னையின் தெருக்கள் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பத்மேஷ் மார்த்தாண்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்‌ஷன் தயாரித்துள்ளது. விரைவில் படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
Powered by Blogger.