மதுரையில் தமிழ் தொழில்முனைவோர்கள் மாநாடு!

இந்த மாத இறுதியில் தமிழ் தொழில்முனைவோர்கள் சர்வதேச மாநாடு மதுரையில் நடக்கவுள்ளது.



தொழில்முனைவை ஊக்கப்படுத்தும் விதமாகவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் மதுரையில் டிசம்பர் 28 முதல் 30 வரையில் 3 நாட்கள் சர்வதேச தமிழ் தொழில்முனைவோர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. மதுரைக்கு அருகேயுள்ள நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில் சுமார் 500 தொழில்முனைவோர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து டிசம்பர் 7ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலசந்திரன் ( தி ரைஸ் துணைத் தலைவர் ) பேசுகையில், “தொழில்முனைவில் ஆர்வமுள்ளவர்களுக்கும், தொழில் தொடங்கி ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கும் தொழில்முனைவோர்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருபவர்களைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட இந்த நிகழ்ச்சி வாய்ப்பாக இருக்கும். தமிழர்களின் ஒரு நூற்றாண்டு கால வர்த்தகம் மற்றும் வியாபாரத்தைப் புதுப்பிக்கும் விதமாக இந்த மாநாடு அமையும்” என்றார்.

இந்த மாநாட்டில் ஜப்பான், கனடா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளிலிருந்து தமிழ் தொழில்முனைவோர்கள் பங்கேற்கவுள்ளனர். தொழில் வாய்ப்புகளை இங்குப் பகிர்ந்துகொள்வது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தி ரைஸ் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “துறை வாரியான விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும். வேளாண் துறை, சுற்றுலா போன்ற துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும். வேலைவாய்ப்புகளைத் தேடும் கலாச்சாரத்திலிருந்து, வேலைகளை உருவாக்கும் கலாச்சாரத்துக்கு மாற வேண்டும் என்பது இந்த மாநாட்டின் மைய நோக்கமாகும்” என்றார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.