பெற்ற மகளை வி‌ஷம் கொடுத்து கொன்ற தாய்

பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த விவசாயி காசி. இவரது மகள் மகராசி (வயது 27). இவருக்கும் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் சிவமகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.


சென்னையில் வசித்து வந்த கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்து கொண்டு மகராசி மேலப்பாட்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்த குடும்பத்தினர் மற்றும் பெரியவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் அது நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று காலை குழந்தை சிவமகேஸ்வரி வீட்டில் பிணமாக கிடந்தது. இதைப்பார்த்த பாட்டி சந்திரா அதிர்ச்சியடைந்து மகராசியை தேடினார். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் போலீசார் பிணமாக கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் மகராசியை அப்பகுதியில் போலீசார் தீவிரமாக தேடினர்.

அப்போது அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் மகராசி நின்று கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்ற திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார். அதன் விபரம் வருமாறு:-

எனது கணவர் அடிக்கடி என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் நான் எனது தாய் வீட்டிற்கு கணவரை பிரிந்து வந்துவிட்டேன். ஆனால் தொடர்ந்து எனது குடும்பத்தார் என்னையும், எனது கணவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

இதனால் மனமுடைந்த நான் எனது குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி இன்று காலை அரளிவிதையை அரைத்து எனது மகள் சிவமகேஸ்வரிக்கு கொடுத்தேன். பின்னர் அங்கிருந்து இப்பகுதிக்கு வந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்’.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மகராசியை கைது செய்தனர். கணவரை பிரிந்ததால் பெற்ற மகளை தாய் வி‌ஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
scoure-malaimaler
Powered by Blogger.