மீண்டும் யாழில் அச்சத்தை உருவாக்கும் இராணுவ கட்டளைத் தளபதி

வீதியில் சோதனைச் சாவடிகளை அமைத்து மக்களைக் காப்பாற்றுவோம் என்ற யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அது நல்லிணக்கத்தை சிதைக்கும் செயற்பாடு என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


யாழ். நகரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து முன்னாள் போராளிகளை அச்சமூட்டுவது மட்டுமன்றி வடக்கில் உள்ள மக்களும் அச்சத்துடன் வாழும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது.

யுத்தம் நடைபெற்று யுத்த அழிவில் இருந்து மீண்டெழுந்து, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் முன்னாள் போராளிகள். இவர்களின் மனதில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் படைத் தளபதியின் கருத்து அமைந்துள்ளது.

படைத்தளபதி இவ்வாறு அச்சமூட்டும் கருத்தை தவிர்த்திருக்க வேண்டும். இராணுவத்தின் கடமைகளை ஆற்றட்டும். ஆனால், சமூக மயப்படுத்தப்பட்டிருந்த போராளிகளை அச்சமூட்டும் வகையில் கருத்துக்கள் தெரிவிப்பதென்பது, மிகவும் வருத்தத்திற்குரியது.

ஏனெனில், அவர்கள் இதுவரையில், துப்பாக்கி எடுத்ததாகவோ, சத்தம் கேட்டதாகவோ இந்த மண்ணில் இல்லை.

இவ்வாறான நிலையில், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எடுத்தவுடனே, முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து கூறுகின்ற கருத்தானது, ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் கருத்தாக பார்க்கின்றோம்.

மக்களை அச்சத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சிவில் நிர்வாகத்தில் பொலிஸார் இருக்கின்றார்கள். சிவில் கட்டமைப்பு சரியான இருக்கும் பட்சத்தில் இராணுவம், முதன்மையாக தமது கருத்துக்களை கூறுவதும், மக்களை தமது பிடிக்குள் வைத்திருக்க கூறும் கருத்துக்களையும் ஏற்க முடியாது.

தெற்கில் தோன்றியிருக்கும் பதவிக்குழப்பம் வடக்கில் மக்களை எந்தளவிற்கு பாதித்திருக்கிறது என்பதற்கு அப்பால், இந்தக் கொலைச் சம்பவமும் கூட ஏதாவது ஒரு பின்னணியில் நடந்திருக்கலாம் என மக்கள் கருதுகிறார்கள்.

கொலைச் செய்தவர்கள் யார் என கண்டு பிடிப்பதற்கு முன்னரே, போராளிகள் மீது அந்தப் பழியைத் தூக்கிப் போடும் செயற்பாடு மக்களை தொடர்ந்தும் அச்சத்தில் வைத்திருக்கும் முயற்சி.

இவ்வாறு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சிதைக்கும் கருத்துக்களை அதிகாரத் தொனியில் தெரிவிப்பது கண்டனத்திற்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Ananthi sasitharan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.