தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க – வைத்திய கலாநிதி யோ.சிவாகரன்

பொதுவாகப் பல தாய்மார் தமது பாற்சுரப்புக் குறைவாக உள்ளது என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர். ஆனால் உண்மை அப்படியல்ல. உங்களின் குழந்தையின் விகிதாசாரமான நிறை அதிகரிப்பு, போதுமானளவு சிறுநீர் கழித்தல், அடிக்கடி பாலூட்டப்படல் ஆகியன உரிய அளவு பாற்சுரப்பை எடுத்துக்காட்டும் சான்றுகளாகும்.


பாற்சுரப்புக் குறைவை ஏற்படுத்தும் காரணிகளாக மாப்பால், பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றால் பாலூட்டல் பிரதியீடு செய்யப்படுதல்,பாலூட்டப் பயன்படுத்தப்படும் சூப்பிகளால் தாயின் முலைக்காம்புகள் மீதான சிசுவின் நாட்டமின்மை. முலைக்காம்புக் கவசம், சீரான கால இடைவெளியிலான திட்டமிடப்பட்ட பாலூட்டல், உறங்கும் குழந்தை சிசு பாலுறிஞ்சலை நிறுத்தமுன் பாலூட்டலை நிறுத்தல்,அதிகரித்த பாற் கொழுப்பு, ஒரு மார்பகத்தை மட்டும் பாலூட்டலுக்குப் பயன்படுத்தல் போன்றவை அடையாளப்படுத்தப்படுகின்றன.

இனி பாற்சுரப்பை அதிகரிக்கும் வழிவகைகள் பற்றிப் பார்ப்போம்.பாற்சுரப்பானது தேவைக்கேற்ற
வாறே நிர்ணயிக்கப்படுகின்றது. உங்களுக்கு அதிகரித்த பால் தேவைப்படுகையில் பாற்சுரப்பு அதிகரிக்கும். உங்கள் சிசுவிற்கு மிகைத்திறனுடன் பாலூட்டுவதை உறுதிப்படுத்தவும். சிசுவால் அதிகளவு பால் உறிஞ்சலின் மூலம்அகற்றப்படுமிடத்து மேலும் மேலும் பாற்சுரப்பு அதிகரிக்கும்.

பாலூட்டலின் போது குழந்தையின் தலையும் உடலும் ஒரே நேர்த்தளத்திலிருத்தல், குழந்தையின் முகம் தாய் மார்பகத்துக்கும் முலைக்காம்புக்கும் எதிராக இருத்தல், குழந்தையின் மேலுதடு அல்லது மூக்கு தாயின் முலைக் காம்புக்கு எதிராக இருத்தல்,

ஆகியன பாற்சுரப்பைக் கூட்டும். அடிக்கடி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டவும். பகலில் 1.5-2 மணித்தியாலத்துக்கொரு தடவையும் பாலூட்டல் சிறந்தது.

பாலூட்டும் ஒரு தடவை ஒரு பக்க மார்பகத்தை முழுமையாகப் பயன்படுத்தவும். மறுமுறை மறுபக்க மார்பக்கத்தைப் பயன்படுத்தவும். பாலூட்டலுக்குச் சூப்பிகளையும் போத்தலையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.குழந்தைக்குமுதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். திண்ம,திரவ உணவுகளை தவிர்க்கவும்.

போதுமான ஓய்வும் உறக்கமும் பாலூட்டும் தாய்க்கு மிகஅவசியம். மன அமைதியும் திருப்தியும் பாலூட்டலை அதிகரிக்கும். போதுமானளவு சுத்தமான நீரையும் சமச்சீரான போசணையுடைய உணவையும் உள்ளெடுக்கவும்.
(புரதம்,கல்சியம்).பாலூட்டலுக்கு இடையிலான நேரத்தில் பம்பிகளைப் பயன்படுத்தி மேலதிகமாக மார்பகங்களில் தேங்கியுள்ள பாலைஅகற்றல், அதிகளவு பாலுற்பத்தியைத் தூண்டும்.

குழந்தைக்குப் பசியெடுக்கும் போது பாலூட்டவும். மார்பகங்கள் பாலினால் நிரம்பும்வரை காத்திருக்க வேண்டாம். குழந்தையுடனான நேரடித் தொடுகையானது நீண்டதும் அடிக்கடி நிகழும் பாலூட்டலைத் தோற்றுவிக்கும். பாலூட்டும் நேரத்தை உங்கள் சிசுவே தீர்மானிக்கட்டும். ஒரு பக்க மார்பின் பாலினளவு குறையும் போது மறுபக்க மார்பில் பாலூட்டலைத் தொடரவும்.

இரவில் குழந்தையை அருகில் பேணுவதுடன் அடிக்கடி பாலூட்டலை மேற்கொள்ளவும். பகலிலும் நேரடித் தொடுகையைப் பேணவும். இளஞ்சூடான துணியை மார்பகங்களின் மேல் இறுக்கமாகக் கட்டவும்.விரல் நுனிகளால் மேலிருந்து கீழாக மார்பகங்களை வருடி விடவும்.முலைக்காம்பைச் சுற்றி வட்டவடிவமாக மார்பகங்களை அழுத்தி விடவும்.

இறுக்கமாக மூடியுள்ள கையை மார்பின் மேல் வைத்து முலைக்காம்பை நோக்கிய வண்ணமாக உருட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய் நாற்காலியில் அமர்ந்து முன்புறம் குனிந்து தனக்கு முன்னுள்ள மேசையின்மேல் தனது புயங்களை மடித்து அவற்றின் மேல் தலையை வைத்து ஓய்வாக இருக்க வேண்டும்.

மார்பகங்கள் தளர்வாகத் தொங்கியபடியிருக்க வேண்டும்.பின் கழுத்திலிருந்து தோள்பட்டைகளுக்குக் கீழான பகுதிவரை முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலும் பெருவிரல்களால் அழுத்தி விடல் ஒரு சிறந்த பயிற்சியாகும்.

இந்த முறைகள் பயன்தரா விடத்து வைத்திய ஆலோசனையை நாடி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயன்பெறலாம்.

வைத்திய கலாநிதி யோ.சிவாகரன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

Powered by Blogger.