ரபேல் ஊழலுக்கு ஆதாரம் இல்லை: உண்மையை உளறிய மணிசங்கர் அய்யர்

காற்றை நீருக்குள் மறைக்க முடியாது என்பான் புத்திசாலி’


‛ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை, அவரை நிரபராதியாகவே கருத வேண்டும்’ என்கிறது அரசியல் சாசனம். அதே போல், ‛ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது’ என்பதே நம் சட்டம் சொல்லும் ஆகச் சிறந்த நீதி.

சட்டமும், நீதியும் இப்படி இருக்கையில், ஆதாரமே இல்லாத ஒரு பொய்யான குற்றச்சாட்டை கிளப்பிவிட்டு, அதை மீண்டும் மீண்டும் பேசி, நாட்டு மக்கள் மத்தியில், மத்திய பா.ஜ., அரசு மீதான நல்லெண்ணத்தை உடைத்து, குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காங்கிரஸ்.

சுதந்திரத்திற்கு பின், 60 ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆட்சி செய்த கட்சி என்ற பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல், வரும் லோக்சபா தேர்தலில், எப்படியாவது பா.ஜ.,வை தோற்கடித்து, காங்., தலைமையிலான ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில், எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டார், காங்.,  தலைவர் ராகுல்.

நாட்டின் பாதுகாப்பிற்காக, அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு,  பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தம் ஒன்றும், இன்று புதிதாக போடப்படவில்லை. ஏற்கனவே, காங்கிரஸ் தலைமையிலான,  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போதே, அன்றைய அரசால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுதான்.

எனினும், புதிதாக, பா.ஜ., தலைமையிலான அரசு தான், இந்த ஒப்பந்ததை செய்துள்ளது போல், காங்., தலைவர் ராகுல் பேசி வருகிறார்.

அடுத்ததாக, பொதுத்துறை நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படாமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார். அதற்கும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பார்லிமென்ட்டில் விரிவான விளக்கம் அளித்து விட்டார்.

அதே போல், நாட்டின் பாதுகாப்பு கருதியே, கூடுதல் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்சிடமிருந்து முதல் முறையாக விமானங்கள் வாங்கப்பட்ட பின், அது போன்ற விமானங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும், அமைச்சர் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.

அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும், மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய முன்னாள் அமைச்சர், மணிசங்கர் அய்யர், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்ற உண்மையை தன்னையும் அறியாமல் உளறியிருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் பேசியதாவது: "ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதனால், அதை நிரூபிக்கப்படவில்லை.

எனினும், இந்த விவகாரத்தால், பிரதமர் நரேந்திர மோடி அப்பழுக்கற்றவர் என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது. இது, வரும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அந்த கட்சி தோல்வி அடையும்: இவ்வாறு அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

மணிசங்கரின் இந்த பேச்சிலிருந்தே, எவ்வித ஆதாரமமும் இல்லாமல் தான், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக, காங்கிரார் பேசி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உண்மையை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

ஆதாரமே இல்லாத ஒரு பொய் குற்றச்சாட்டை தொடர்ந்து பரப்பி, அதை மேலும் மேலும் ஊதிப் பெரிதாக்கி, அதன் மூலம், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., மீது களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியையே ராகுல் மேற்கொண்டுள்ளார்.

பதவி சுகத்திற்காகவும், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்திற்காகவும், நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் கூட கபட நாடகம் அரங்கேற்றி, ஆட்சியை பிடிக்க துடிக்கும் காங்., தலைவர் ராகுலை என்னவென்று சொல்வது. மணிசங்கர் ஐயரின் பேட்டியில் இந்த விஷயங்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுலின் திட்டம் மிகத்தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் பாேது, ‛காற்றை நீருக்குள் மறைக்க முடியாது’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
Powered by Blogger.