பாடுநிலாவே பாகம் 19

கண்வெட்டாது அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் காங்கேசன். அவளுக்கும் தனக்குமான தொடர்பு என்று, எப்படி ஆரம்பித்தது என்பது அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால் அவள் தன்னுயிரோடு கலந்துவிட்டவள், என்பது மட்டும் அவனுக்கு மிகத்தெளிவாக இருந்தது.
ஒருநாள் இரண்டுநாள் அல்ல, பத்து ஆண்டுகள் எந்த நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்திருக்கிறான்? அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா? என்பதே தெரியாத நிலையில் அவளுக்கான அவனது தவம் முழுமை பெற்றிருக்கிறது, அவளோடு இல்லற பந்தத்தில் இணைவதும் இணையாமல் போவது அவனுக்கு இரண்டாம் பட்சமாகவே தோன்றியது. அவளுக்கு நிழலாய் அவளுக்கு துணையாய் அவளுக்கு ஒரு பாதுகாப்பாளனாய் வாழ்ந்துவிட்டாலே போதும் என்பதே அவனது எண்ணமாக இருந்தது. 

எண்ணங்கள் சிறைசெய்ய கண்ணீர் கோடிட்டது காங்கேசனுக்கு. அவனுக்குத் தெரியும். காங்கேசன் – சாதனா என்ற உறவு சாதாரணமானது அல்ல, அது ஆழமான அற்புதமான ஒன்று, இல்லையென்றால் இருவேறு தேசங்களில் பிறந்த அவனும் அவளும் மனதால் உணர்வால் ஒன்றுபட்டிருப்பது சாதாரணமான விடயம் அல்லவே. அதிலும் நேசத்தின் உச்சமான இந்த காத்திருப்பு? 
“காரு நீ போகலையாடா?” கேட்டபடி வந்த அண்ணனிடம்,

“ அவ கூட நிறைய பேசணும் அண்ணா, அவ கண் விழிச்சதும்” அவன் சொல்லி முடிப்பதற்குள், 
“என்னடா நீ, அவ இனிமே எப்பவும் நம்மகூடவேதான் இருக்கப்போறா, எப்ப வேணும்னாலும் பேசவேண்டியது தானே?” என்றான் பகலவன். 
“அண்ணா, நீ ஒரு விசயத்தை தெளிவா புரிஞ்சுகொள், நாம சாதனாவை இங்க கொண்டுவந்து உதவி பண்றோம் என்றதுக்காக அவளுக்குப் பிடிக்காத எதையும் திணிக்கவோ கட்டாயப்படுத்தவோ கூடாது, அவ தனக்கு எது சரின்னு நினைக்கிறாளோ, அதையே பண்ணட்டும், எனக்கு சாதுவைத் தெரியும், அவ எண்ணங்கள் புரியும், நிச்சயமா ஒரு கல்யாண வாழ்க்கைல அவ தன்னோட கனவுகளை அடைச்சிக்கவிரும்பமாட்டா, அவ மனசில நான் இருக்கேன், அது தெரியும், எனக்கு அது ஒண்ணே போதும், அவ இலட்சியங்கள் தான் எனக்கு ரொம்ப முக்கியம், அவ சந்தோசம் மட்டும்தான் பெரிசு, அவ அவளாவே வாழணும், எனக்காக அவ எதையும் மாத்திக்கவேணாம், அப்பிடி அவளை யாரும் கட்டாயப்படுத்தவும் கூடாது” நீண்ட பெருமூச்சோடு சொல்லிமுடித்த தம்பியை ஆதூரமாய் பார்த்தான் பகலவன்.

“என்னடா சொல்றாய், அவளைக் கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு சின்னமருமகளா ஆக்குவேன்னு நினைச்சா, நீ என்னென்னவோ சொல்றியே?”

“அவ சிட்டுக்குருவி, அவ பறக்கணும், என் கையில தாங்கி அவளைப் பறக்கவைக்கத்தான் நானும் ஆசைப்படுறன், முடிவு அவ கையிலதான் இருக்கு, என் கையில இருந்திட்டே பறக்கிறதா, இல்ல தானா பறக்கணுமான்னு அவளே முடிவுபண்ணட்டும், யாரும் அவளை கட்டாயப்படுத்தவேணாம், நான் வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிடுறேன்” என்றான் காங்கேசன்.

“டேய் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இது ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்டா,” என்ற அண்ணனை நிமிர்ந்து பார்த்தவன், 
“இருக்கலாம், ஆனா அவங்க புரிஞ்சுப்பாங்க, இது காதல்டா, ஆழமான நேசம், கணக்குப்பாத்து அத தீர்த்துக்க முடியாது, சாதாரணமா அவ இருந்திருந்தா பரவாயில்ல, கேட்டிடலாம், நாம உதவி பண்ணிட்டு கேக்கிறது ரொம்ப அபத்தம், அவ மனசால உடைஞ்சுபோயிடுவா, என் சாதுவை எனக்குத் தெரியும், இனிமே நா கேட்டா, அவ கண்டிப்பா சம்மதிச்சிடுவா, ஆனா அது அவளை அவமானப்படுத்தினதா உணருவா, நன்றிக்கடன் தீர்க்கிறதா நினைச்சிக்குவா, எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வாழணும் என்றதைவிட அவ காதலுக்கு காலம் பூராவும் சொந்தக்காரனா வாழணும், அவளோட கனவுகளைக் கொண்டாடணும், காங்கேசன் என்ற பெயர் அவ மனசில நீக்கமற நிறைஞ்சிருக்கணும், அவ்வளவுதான்” என்றான்.
விழியில் துளி நீரோடு கூறிய தம்பியை அதே விழி நீரோடு பார்த்தபடி வெளியே நடந்தான் பகலவன், அழகிய தேவதைபோல உறங்கிக்கொண்டிருந்த சாதனாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு அதிர்ந்தான் காங்கேசன். அவளது கன்னத்திலும் கண்ணீரின் கோடுகள். ஆனால் அவள் ஆழந்த உறக்கத்தில் இருந்தாள். ‘உள்ளம் பேசுவது இதுதானோ’ எண்ணத்தினூடே அண்ணனைப் பின்தொடர்ந்து நடந்தான் காங்கேசன். 
மாலைப்பொழுது,

வைத்தியசாலையில் காங்கேசனின் உறவினர் சிலரும் கூடிவிட்டனர். யாருமில்லாத சாதனாவிற்கு அவர்களைப் பார்க்கும் போது மகிழ்வும் நிறைவும் ஒருபக்கம் சங்கடமுமாய் இருந்தது. அவள் யார்? அவளுக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? ஏன் அவளைப்பார்க்க கூடியிருக்கிறார்கள், காங்கேசனுக்காகவா? அவளுக்காகவா? 
அவள் விழியில் தெரிந்த மருட்சி அவள் மனதைச் சொல்லியதோ? அவசரமாய் அருகில் வந்த கானகி, 
“சாதனா, எதுக்கு இப்பிடிப் பார்க்கிறீங்க. உங்க மண்ணும் எங்க மண்ணும் வேறவேற இல்ல, தொப்புள் கொடி உறவுதான், நீங்களும் நாங்களும் உறவுகள் தான், அதனால தான் இவங்களை எல்லாம் வரவைச்சேன்” என்றாள்.

மனம் நிறைந்து மகிழ்வுடன் புன்னகைத்தாள் சாதனா. அவளது அந்தப் புன்னகையில்காங்கேசன் ஆயிரம் அர்த்தம் கண்டான் என்றால், தன் மனைவியாகப்போகும் கானகியின் சாமர்த்தியத்தில் அசந்து நின்றான் பகலவன். 
மெல்ல நிமிர்ந்தாள், சாதனா, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் காங்கேசன்.
தொடரும்


கோபிகை 
இணைஆசிரியா் 
ஒளிஅரசி சஞ்சிகை
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.