வடக்கு- கிழக்கு இணைப்பு இல்லை -ரனில்!


புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றும் சமஸ்டி ஆட்சி முறை இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளைத் தயாரிக்கும் நிபுணர்குழுவிடம் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். ஏலவே நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் ஒன்பதாவது சரத்தில் உள்ள பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை, புதிய அரசியல் யாப்பில் தொடர்ந்தும் இருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.    புதிய அரசியல் யாப்பில் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இலங்கை இரண்டாகப் பிளவுபடப் போகின்றது எனப் பிரச்சாரம் செய்ய முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார். அதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நிபுணர்குழு அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டபோதும் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மாறாக நிபுணர்குழுவிடம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் கையளித்த அறிக்கை மாத்திரமே ரணில் விக்கிரமசிங்க்வினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனது உரையின் எந்தவொரு இடத்திலும் கூறவில்லை. மாறாக அரசியல் கட்சிகள். பொது அமைப்புகள் கையளித்துள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள நல்ல விடயங்களை மாத்திரம் புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ரணில் விக்கிரமசிங்கவின் உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கா, புதிய அரசியல் யாப்புக்கான வரைபை சமர்பித்து எந்தப் பயனும் இல்லை என்று கூறினார். எதுவும் நடக்கப்போதில்லை எனவும், வேண்டுமானால் சுமந்திரன் இந்த அறிக்கைகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருக்க முடியும் என்றும் அனுரகுமார திஸாநாயக்கா கிண்டலாகக் கூறினார். புதிய அரசியல் யாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். இதேவேளை, புதிய அரசியல் யாப்புக்கான நகல் யோசனைகளில் ஒற்றையாட்சி முறை நீ்க்கப்பட்டு ஒருமித்த நாடு என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் அந்த ஒருமித்த நாட்டுக்குள் சமஸ்டி ஆட்சி முறை இருப்பதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி வருகின்றார். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக நடத்தப்பட்ட விளக்கமளிக்கும் கூட்டத்திலும் சுமந்திரன் அவ்வாறு கூறியிருந்தார். இந்த நிலையில் ஒற்றையாட்சி மாறாது எனவும் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி முறை எதுவுமே இல்லையெனவும் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்கமாவே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.