100 ஏக்கர் அரச காணிதனிநபர் ஒருவரினால் அபகரிப்பு. பொதுமக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா வேலங்குளம் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட அலியா மருதமடுக்குளத்தின் கீழுள்ள 100ஏக்கர் அரச காணியினை தனிநபரொருவர் தன்னகப்படுத்தி அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தல், அரச அதிகாரிகள் மீதும் அரச நிறுவனங்கள் மீதும் வீண் பழிசுமத்தல் போன்றவற்றால் நாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். எனவே இவரால் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கையில் ஈடுபட எமக்கு உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

விவசாய செய்கையின் போது பின்பற்ற வேண்டிய எந்தவித ஒழுங்கு முறைகளையும் பின்பற்றுவதில்லை ( வேலி , பீலி அமைத்தல் விதைப்புத்தவணைகள், நீர்ப்பாசனம்) ,செய்கை பண்ணப்படும் வயற்காணியின் அளவை விட மிக அதிகமான அளவு செய்கை பண்ணப்படுவதாக குறிப்பிட்டு பெருந்தொகையான அளவு உர மானியத்தை நீண்ட காலமாகப் பெற்று அரச வளத்தினை துஷ்பிரயோகம் செய்து வருகின்றார்.இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத்தெரிவித்த அலியாமடு கமக்காரர் அமைப்பினை தனது அரச அதிகாரிகளிடம் உள்ள செல்வாக்கினைப்பயன்படுத்தி கலைத்து விட்டு தனக்குச்சாதகமாகச் செயற்படக்கூடிய அயலில் உள்ள வேலங்குளம் கமக்காரர் அமைப்புடன் இணைந்து எமது குளத்தை சட்டத்திற்கு முரணாக இணைத்து செயற்படுகின்றார். கமநல நிலையத்தினால் அலியாமடு வயலிற்கென ஒதுக்கப்பட்ட இரண்டு கிணறுகளையும் வேறு எந்த ஒரு அமைப்பிற்கோ, மக்களுக்கோ தெரியாமல் இவர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் காணியில் இவரது பெயரிலும் இவருக்கு வேலை செய்பவர்கள் பெயரிலும் அமைத்துள்ளார்.

அலியாமடு வயல் காணியில் இவர் பயிர் செய்யும் பின் பகுதியில் சின்னதம்பனைக் குளத்தலக்கரையில் எவரது அனுமதியும் இன்றி ஒருபோதும் துப்பரவு செய்யப்படாத அரச காணி 15 ஏக்கரை டோசர் மூலம் அழித்து தனது காணி என வைத்துள்ளார்.

சின்னதம்பனைக்குளத்தின் நீர்ப்படுகைக்காக எல்லையிடப்பட்ட காணியினை பிடித்து வைத்துள்ளார். திருநாவுக்கரசு யோகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான 20 ஏக்கர் குள இடாப்பில் பதிவுள்ள வயற்காணியினை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார். (நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது)

அலியாமடு குளத்தின் சில பகுதியினை அபகரித்து வேலியடைத்து தென்னமரம் , கிணறு போன்றவற்றை கட்டியுள்ளார். குளத்தின் கீழுள்ள 100 ஏக்கர் அரச காணியினை அபகரித்து குத்தகைக்கு வழங்கியுள்ளார். விதவைப் பெண்ணான கிளி என்பவரின் 5 ஏக்கர் காணியை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளார். வழக்குத்தாக்கல் செய்வதற்கு வசதியற்ற ஏழைகளாகக் காணப்படுவதால் வழக்குத்தாக்கல் செய்யவில்லை.

மடுக்குளம் காட்டுப்பகுதியில் உரிய அனுமதிகளைப் பெறாமல் பெருந்தொகையான தடிகளை வெட்டி வேலி அமைப்பதன் மூலம் காடுகளை அழித்து வருகின்றார். பல தசாப்த காலமாக நிரந்தர வதிவிடங்களைக் கொண்டவர்களாக வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதோடு அவர்களுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றார்.

இது போன்ற பல செயல்களில் குறித்த நபர் ஈடுபட்டு வருகின்றார். இதன் காரணமாக எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் தலையிட்டு 100 ஏக்கர் அரச காணியினை குறித்த நபரிடமிருந்து மீட்டெடுத்து எமது கிராமத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்குமாறும்,

விவசாய அமைச்சர் – வடமாகாணம் , பாராளுமன்ற உறுப்பினர்கள் – வன்னி , மாகாண சபை உறுப்பினர்கள் – வன்னி , காணி ஆணையாளர் – வடமாகாணம் , அரசாங்க அதிபர் – வவுனியா , பிரதேச செயலாளர் – வவுனியா , கமநலசேவை உதவி ஆணையாளர் – வவுனியா , நீர்ப்பாசனத்திணைக்களப் பொறியியலாளர் – வவுனியா , கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் – வவுனியா , மாவட்ட வனவள அதிகாரி – வவுனியா , உதவி பொலிஸ் அத்தியட்சகர் – வவுனியா, பொலிஸ் பொறுப்பதிகாரி – பூவரசங்குளம் ,  தலைவர் – வவுனியா தெற்குத் தமிழ் பிரதேச சபை ,கிராம அலுவலர் – வேலங்குளம் ஆகியவர்களுக்கு எழுத்து மூலம் தகவல் வழங்கியும் இதுவரைவில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் க.உதயராசா கருத்து தெரிவிக்கையில்,

குறித்த நபர் அப்பகுதியில் நூற்றுக் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அபகரித்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இக்காணி தனியே அரசகாணி அங்கு தனியார் காணி எவையும் இல்லை .

குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் எமக்கு ஆதாரங்களுடன் எமக்கு கடிதம் தந்துள்ளனர். அந்த கிராமத்தில் 345 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் இவர்களுக்கு விவசாயம் மேற்கொள்ளுவதற்கு ஒரு ஏக்கர் காணி கூட அவ்விடத்தில் இல்லை குறித்த பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக கஸ்டப்படுகின்றனர்.

குறித்த காணியில் 27நபர்கள் பங்குதாரர்கள் என உள்ளது. குறித்த 27 நபர்களும் இங்கு இல்லை அனைவரும் வெளிநாடுகளில் உள்ளனர். தற்போது நாட்டிலுள்ள அரசாங்க சட்டத்தின் பிரகாரம் ஒரு நபருக்கு ஓரு ஏக்கர் வயல்காணி மாத்திரமே வைத்திருக்க முடியும்.

எனவே இந்த வருட இறுதிக்குள் குறித்த 100 ஏக்கர்அரச காணியினை மீட்டெடுத்து பொதுமக்களுக்கு பங்கிட்டு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அக்கிராமத்தின் கிராம சேவையாளர் மணிமாறன் கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி பிரச்சனை தொடர்பாக எனக்கும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கிராம மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் தான் . அந்த விவசாயத்தினை தனிநபரொருவர் 50 ஏக்கருக்கு மேல் செய்வதினால் அங்குள்ள மக்களுக்கு விவசாயம் செய்வதற்கு முடியவில்லை மேலும் உர மானியங்கள் , அரச சலுகைகள் போன்ற எவையுமே கிடைப்பதில்லை .

இந்த காணி முழுவதுமே அரச காணி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கமநல அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையில் குறித்த காணிகள் அரச காணிகள் ஆகும் . மடுக்குளத்தினை அண்டிய பகுதிகள் அனைத்துமே அரச காணிகளாகவே காணப்படுகின்றது.

குறித்த காணிகளை மீட்டெடுத்து மக்களுக்கு வழங்குவதாயின் முற்றுமுழுதான அதிகாரம் பிரதேச செயலாளருக்கே உள்ளது. அரச காணி மீட்புச் சட்டத்தின் கீழ் வழக்கினை தொடுத்து மீட்டெடுக்க முடியும்.

பிரதேச செயலாளர் குறித்த அரச காணிக்கு உரமானியங்கள் எவையும் வழங்க வேண்டாமென எழுத்து மூலம் தெரிவித்தால் நாங்கள் குறித்த காணிக்கு உரமானியங்கள் வழங்குவதை நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.