அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் உத்தரவு!

பனிப்போரை வெளிப்படையான அரசியல் நிலைப்பாடாக மாற்றும் வகையில், அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார்.


வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், நிக்கோலஸ் மடுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மடுரோவுக்கு எதிரான மற்றும் ஆதரவுப் போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

அதிபர் மடுரோவுக்கு எதிராக, இராணுவத்தில் உள்ள ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நிக்கோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால், தனது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு வரை உள்ளது எனவும் அதற்குள் பதவி துறக்க மாட்டேன் என்றும் நிக்கோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மடுரோவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவைக் கண்டு நிக்கோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன் விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.

இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிக்கோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ளப்போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ அறிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.