விடுதலைப் புலிகளுக்கு தென்இந்தியாவில் பயிற்சி! ! சிங்கள ஊடகம் தகவல்!

தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் வடக்கில் மீளவும் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கிலிருந்து பிரசுரமாகும் வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், தென் இந்தியாவின் பயற்சி முகாம்களில் 25 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புலிப் போராளிகள் இந்த ஆண்டில் இலங்கைக்கு திரும்பி வடக்கை மையமாகக் கொண்டு நான்கு பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நோக்கிலான பிரச்சார உத்தியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வவுனியா - புளியங்குளம் பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கைவிட்டு தப்பிச் சென்ற கந்தையா ஆனந்தராசா தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல்வேறு உண்மைகள் அம்பலமாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான ஆறு சந்தேகநபர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும், தெல்லிப்பளை, கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, நெடுங்கேணி, போன்ற பல்வேறு இடங்களை சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்றை நடத்தவும், மடு இராணுவ முகாமின் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், புலம்பெயர் சமூகத்தின் தேவைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும், வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் புலி உறுப்பினர்களை, ரங்கன் மற்றும் இன்பன் ஆகிய இரண்டு முன்னாள் புலித் தலைவர்கள் வழிநடத்தி வருவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் இறுதிக் கட்ட போரின் போது இந்தியாவிற்கு தப்பி சென்று அங்கு தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி இந்தியாவிலிருந்து படகு மூலம் வந்த நான்கு இளைஞர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இராணுவம், கடற்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன விசாரணை செய்ய வேண்டிய போதிலும் அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை நடத்தி வருவதனால் பல்வேறு உண்மைகளை கண்டறிய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சோ, இலங்கை இராணுவமோ எவ்வித தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.