வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கு ஆதரவு கோருகின்றோம்.!

அன்பான உறவுகளே!
நடந்து முடிந்த யுத்தகாலத்தில் எமது உறவுகள் கடத்தப்பட்டும், எம் கண்முன்னே கைது செய்யப்பட்டும்,
விசாரித்து விட்டு விடுகின்றோம் என்று கூறி அழைத்தும் செல்லப்பட்ட எமது கணவர்கள்,

மனைவியர்கள், பிள்ளைகள், சகோதரர்கள், எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்னும்
வீடு திரும்பவில்லை.
நாம் அவர்களை இழந்து நிர்க்கதியாய் வாழ வழியின்றித் தவிக்கின்றோம். பல பிள்ளைகள் தமது
அப்பாக்களை தெரியாதவர்களாக வாழ்ந்து, வறுமையில் வாடி வருகின்றனர். பாடசாலை செல்ல
முடியாதவர்களாக, சென்றும் படிக்க முடியாதவர்களாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து
வருகின்றனர்.
பல மனைவியர் கணவர்களை தொலைத்துவிட்டு குடும்பங்களை நடாத்த முடியாமல்
மனஅழுத்தங்களுக்கு ஆளாகி துன்பத்தில் உழலுகின்றனர்.
பல பெற்றோர் தமது பிள்ளைகளை காணாது தமது முதுமைக்காலத்தில் தம்மைப் பராமரிக்க
யாருமில்லாது கஷ்டப்படுகின்றனர்.
நாம் இது தொடர்பாக பலவகையான போராட்டங்களை நடாத்தியிருக்கின்றோம். பலவகையான
சாட்சியங்ளை அளித்திருக்கின்றோம். பலவகையான மகஜர்களை கொடுத்திருக்கின்றோம். கௌரவ
ஜனாதிபதி, கௌரவ பிரதமர், சர்வதேச தூதுவராலயங்கள், ஐ.நா. மன்ற அலுவலகங்கள் என
அனைத்துப் படிகளிலும் ஏறி எமது வேண்டுகோள்களை மனமுருகி விடுத்திருக்கின்றோம். ஆனாலும்
எதவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எமது உறவுகள் எம்மிடம் வந்து சேரவில்லை.
கடந்த காலங்களில் நாம் எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் நீங்கள் எங்களுக்கு பக்கபலமாய் இருந்து
ஒத்துழைப்பு வழங்கியுள்ளீர்கள். உங்களது பலமே எமது முயற்சிகளுக்கு உந்து சக்தியாக
விளங்கியிருக்கின்றது.
அக்டோபர் 30ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை
நடாத்தினோம். தொடர்ந்து ஒவ்வொரு மாதம் 30ம் திகதியும் ஒவ்வொரு மாவட்டங்களில் எமது
கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தி எமது வேண்டுகோளை உலகுக்கு தெரியப்படுத்தி
வருகின்றோம்.
அந்தவகையில் இம்மாதம் 30ம் திகதி (30.01.2018 புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வவுனியா
பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை தொடங்கி பஸார்வீதி
வழியாக அரசஅதிபர் காரியாலயத்தை அடைந்து அரசஅதிபர் ஊடாக ஜனாதிபதி, பிரதமர்
ஆகியோருக்கு மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து
மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுமக்கள்
கலந்து கொள்ளவுள்ளனர்.
தாங்களும், தங்கள் உறவுகள், நண்பர்களும் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து வலுச்சேர்க்குமாறு
இருகரம் கூப்பி அழைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது
உறவுகளின் சங்கம்
NEAFRED

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.