பஸ் ஓட்ட கூட தகுதி இல்லாதவர்கள் விமானிகளா? - பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி காட்டம்

பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது.


மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் 7 பேரின் கல்விச் சான்றிதழ் போலியானவை என கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இது குறித்து நீதிபதி கூறுகையில், “பள்ளி படிப்பை முடிக்காத நபர்கள், பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்கள். விமானத்தை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர், “தங்களின் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனவும் உத்தரவிட்டார்.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.