ஐயப்பனை தரிசித்த பெண்கள்: வாழ்த்தும், கவலையும்!

இன்று இரண்டு பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்ததையடுத்து, கேரள
மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த பெண்கள்?
சபரிமலைக்குச் சென்ற இரு பெண்களில் ஒருவர் பிந்து. இவரது வயது 42. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர், தற்போது கண்ணூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தலசேரி பாலயட் சட்டக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆர்வலர் ஆவார்.
இன்னொரு பெண்ணான கனகதுர்கா, மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது வயது 44. சிவில் சப்ளைஸ் துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறார் கனகதுர்கா. சபரிமலை செல்லும் இவரது முடிவுக்கு, குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள வழக்கங்களை மாற்றத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்துத் தாங்கள் கவலையாக உள்ளதாகவும், கடந்த சில நாட்களாகத் தங்கள் சகோதரியைக் காணவில்லை என்றும், போலீசாரும் அது குறித்துத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கனகதுர்காவின் சகோதரர் பாரத் பூஷன் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
பிந்துவும் கனகதுர்காவும் இன்று (ஜனவரி 2) சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்ததையடுத்து, கேரள சட்டமன்றம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டன சில அமைப்புகள். இவர்களைக் கலைப்பதற்காக, போலீசார் கண்ணீர் புகைக் குண்டை வீசினர். அம்மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. கேரளாவில் நாளை (ஜனவரி 3) ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பில் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று கேரள தலைமைச் செயலகம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாஜகவினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதேபோல, இன்று மாலையில் கொச்சி திரிபுனித்துராவில் கேரள பாஜகவின் சார்பில் சபரிமலை சன்னிதானத்துக்குள் இரண்டு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரபலங்களின் எதிர்வினை
சபரிமலை ஐயப்பனை இரண்டு பெண்கள் தரிசனம் செய்தது குறித்துப் பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றது பக்தர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார். “இந்த நடவடிக்கை, கேரள முதல்வரின் முரண்டுபிடிக்கும் குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் அந்த பெண்கள் சென்றது தெளிவாகத் தெரிகிறது. கேரள முதல்வரின் வார்த்தையின்படி போலீஸ் செயல்பட்டுள்ளது. முழுக்க முழுக்க முதல்வரது பிடிவாதமான அணுகுமுறையின் விளைவுதான் இது” என்று அவர் கூறினார்.
மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது, ஒரு குழுவினருடன் ஐயப்பனைத் தரிசிப்பதற்காக கொச்சி சென்றார் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய். ஆனால், அவர் கொச்சி விமானநிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இதனால், அவர் அடுத்தநாளே புனே திரும்பிச் சென்றார். இந்த நிலையில், இன்று இரண்டு பெண்கள் சபரிமலை சென்றதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
“பலரும் முயற்சித்து தோல்வி அடைந்த ஒன்றில், வெற்றி கண்ட இரு பெண்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டில் ஒரு நல்ல தொடக்கமாக இது அமைந்துள்ளது. பெண்கள் சபரிமலை செல்வதை கோயில் நிர்வாகிகள் மற்றும் போலீஸ் உறுதி செய்ய வேண்டும். மேலும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் பயம் இல்லாமல் கோயிலுக்குள் செல்லலாம் என கேரள அரசு அறிவிப்பு விட வேண்டும். பெண்கள் சென்றதால் கோயிலை மூடுவது, பூஜை பண்ணுவது என்பது சபரிமலை செல்லும் பெண்களை அவமானப்படுத்துவதற்குச் சமம். பெண்கள் செல்லுவதால், கோயிலின் புனிதம் கெடுவதில்லை. மாதவிடாய் இயற்கையானது என்பதால் பெண்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். சுத்தம் நம் மனதில்தான் தேவை” என்று திருப்தி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என ஐயப்ப தர்மா சேனா குழுவின் தலைவர் ராகுல் ஈஸ்வர் கூறினார். “கோயில் நடையை மூட தந்திரிகள் எடுத்த முடிவிற்கு நாங்கள் முழு ஆதரவு கொடுக்கிறோம். இந்த சம்பவம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள மறுசீராய்வு மனுவை பலவீனப்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், எங்களால் முடிந்த அளவிற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வோம்” என தெரிவித்தார்.
பல எதிர்ப்புகளை அடுத்து, கடைசியாக இரு பெண்கள் கோயிலுக்குள் சென்று ஐயப்ப தரிசனம் செய்தது சந்தோஷம் தருவதாகக் குறிப்பிட்டார் மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா. “பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கு இது சிறிய காரியமே. இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும். மறைந்து, ஒளிந்து செல்லாமல் மரியாதையுடன் கோயிலுக்குள் பெண்கள் செல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநர் விது வின்சென்ட், இம்முயற்சிக்கு எதிர்ப்பு வருவது குறித்துக் கவலைப்படக் கூடாது என்றார். “100 ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு, பிந்து, கனகதுர்கா, பெண்கள் சுவர் என அனைத்தும் சபரிமலை புரட்சியின் ஒரு பகுதி என்றாகும்” எனக் கூறினார்.

No comments

Powered by Blogger.