பாடுநிலாவே பாகம் 13


கோடைகால மழை கொட்டிக்கொண்டிருந்தது. வகுப்பின் ஓரமாய் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவன், எதையும் உணராது மழையை ரசித்துக்கொண்டிருந்தான்,
கொட்டிய மழையினால் உக்கியிருந்த கிளையொன்று முறியும் தறுவாயில் உள்ளதை அவன் கவனிக்கவில்லை, அப்போது ஏதோ அலுவலாக வெளியே வந்த சாதனா, அதனைக் கவனித்துவிட்டு அவனை எச்சரிக்க நினைப்பதற்குள் கிளை முறியத் தொடங்கியது, எதையும் அறியாது ரசித்துக்கொண்டிருந்தவன், “படார் “ என்ற ஒலியுடன் “அம்மா ----“ என்ற அலறலும் கேட்கவே திரும்பிப் பார்த்தான்.

அவனது முதுகில் சாய்ந்திருந்த சாதனாவின் முதுகை பதம் பார்த்திருந்தது அந்த முறிந்த கிளை.
“ஏய் --- சாது” அவன் குரல் வராது விக்கித்துப்போனான். அவனுக்காக தன்னைப்பற்றி சற்றும் யோசிக்காத அவளது அன்பு, அன்றுதான் அவனுக்குள் புதிதாய் ஒரு உறவை பிரசவித்தது. அவசரமாய் அவளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதும், அவள் வைத்தியசாலையில் இருந்த பத்து தினங்களும் அவன் நடையாய் நடந்து அலைந்ததும் என அந்த எண்ணங்கள் இப்போதும் அவனது மனதை ஒரு கணம் உலுக்கியது.

அதன் பின்னர் அவளைப் பார்க்கும் கணங்களில் எல்லாம் மனதில் மத்தாப்பூ பூத்த போதும் அவள் அறிந்துவிடாதபடி மறைப்பதில் பெரும் சிரமப்பட்டிருக்கிறான்.
தெருவில் கையேந்தி நின்ற குழந்தையை வாரி அணைத்து அவள் தன் நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு விம்மிய போது அவளது தாய்மையில் பூரித்திருக்கிறான்.

தெருவோரத்தில் வெயிலில் பூ விற்ற பாட்டிக்காக அருகில் தான் அமர்ந்திருந்து குடையைப் பிடித்துக்கொண்டிருந்த அவளது கருணையில் சொக்கிப்போயிருக்கிறான்.

போதையில் மனைவியின் முடியைப்பற்றி கால்களால் உதைத்த கணவனிடம் அவள் நீதிகேட்டபோது பெருமிதம் அடைந்திருக்கிறான்.

வாரந்தோறும் முதியோர் இல்லத்திற்கும் குழந்தைகள் பராமரிப்பகத்திற்கும் சென்று சேவை செய்வதைக்கண்டு மனம் உருகியிருக்கிறான்.

வகுப்பில் தன் புத்திக்கூர்மையால் அவள் வெற்றிகண்டபோது வியந்து பார்த்திருக்கிறான்.
எப்போதும் இயல்பான தன் குணங்களையோ இயற்கையான தன் அழகையோ மாற்றிக்கொள்ளாத அவளது யதார்த்தம் கண்டு அதிசயித்திருக்கிறான்.

அத்தனையையும் நண்பனாக மட்டுமே பாராட்டியிருக்கிறான். அவளிடம் அவள் இயல்புகளுக்காகவே தன்னைத் தொலைத்திருக்கிறான் காங்கேசன்.
அவளைவிடவும் அவளது உயர்ந்த இயல்புகளைத்தான் அவன் அதிகமாகக் காதலித்தான் என்பதை அவள் புரிந்துகொள்வாளா?
வாகனம் குலுக்கியதில் ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்து கொண்டான்.

இசையாளனின் குடும்பம் காங்கேசனின் குடும்பத்தை மிக அன்புடன் வரவேற்றுக்கொண்டது. இசையாளனின் தங்கை “சாதனா அண்ணி, சாதனா அண்ணி” என்று அழைத்தபடி சுற்றிச் சுற்றி வந்தபோது, ஆச்சரியம் அடைந்து, “என்னடா, அகல், என்னை அண்ணின்னு கூப்பிடுறா?’ என்றாள்.

“அவளுக்குப் பிடிச்சமாதிரி கூப்பிடுறா, விடேன்” என்றான் அலட்சியமாய் ---
சின்னப் புன்னகை ஒன்று அழகாய் விரிந்தது அவளது உதடுகளில்.
இதுதான் சந்தர்ப்பம் என் எண்ணிய காங்கேசன், “சாது இந்த ஊரைச் சுத்திப்பாக்கலாமா?” என்றான்.
“நீ என்ன கேக்கிறாய் என்று உனக்குப் புரிகிறதா?” என்றாள்.
“ம்ம், புரியுது” “ஏன்?” என்றான்.
“டேய் நீ அடிவாங்கப்போறாய்”
"ஏன்? "
“எனக்கு கண் இல்லடா” சிரித்துக்கொண்டே சொன்னாள் அவள்.
“எனக்கு கண் இருக்கே,” என்ற காங்கேசன், “என் தோழியே, என் கண்கள் ரசிப்பதை உன் செவி வழி உணர்ந்துகொள்” என்றான்.
“ம்ம் போகலாம்” குதூகலமாய் சொன்னாள் சாதனா.

தொடரும்
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.