கஞ்சா கடத்தல் விவகாரம்! உண்மையில் என்ன நடந்தது? விளக்குகிறாா் சுமந்திரன்செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி - பளை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை பொதி செய்து, களஞ்சியப்படுத்தும் இடத்தை சுற்றிவளைத்து கைது செய்த நபர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதி ஒருவர், பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

செம்பியன்பற்றுப் பகுதியில் நேற்று முந்தினம் ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3ம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிசார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிசார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத் துப்பாக்கிகளை காண்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப் பிடித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிசார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் பளைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பழைப் பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர். அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிசார் சீருடைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிசார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் எனப் பளை பொலிசாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்பு பட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.