கப்டன் பண்டிதர் வீரவணக்க நாள்

கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்) கம்பர்மலை பிறப்பு : 25.12.1959 – வீரச்சாவு : 09.01.1985
தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் அண்மையில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.
அச்சுவேலியிலுள்ள எமது கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில், பயங்கரச் சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் தியாகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரமரணம் அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர்.
கப்டன் ரவீந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலி இயக்கத்தின் நிதியமைப்பிற்கும் ஆயுதப் பராமரிப்பிற்கும் பொறுப்பாக இருந்தார்.
வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு வயது 24. 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார். ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகத் தனது உயிரை அர்ப்பணித்துக்கொண்ட இந்த வீர மறவனுக்கு, விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றனர்.
அச்சுவேலித் தாக்குதல் சம்பந்தமாக சிங்கள அரசு விசமத்தனமான பொய்ப் பரிச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. புலி இயக்கத்தின் இராணுவத் தலைமையகத்தை அழித்துவிட்டதாகவும், புலி இயக்கத்தையே ஒழித்துவிட்டதாகவும் வெற்றி முரசு கொட்டி வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் எவ்விதஉண்மையுமில்லை. இதை நாம் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறோம். புலி இயக்கத்தின் இராணுவ அமைப்பில், பெரிதும் சிறிதுமாக ஏராளமான கெரில்லாத் தளங்கள் தமிழீழத்தில் உள்ளன.
அச்சுவேலியிலுள்ள சிறிய கெரில்லாத் தளமொன்றே இம்முற்றுகைக்கு இலக்காகியது. அதுவும் 500இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கனரக ஆயுதங்களுடன், எமது 15 கெரில்லா வீரர்களைத் திடீரென – எதிர்பாராமல் சூழ்ந்து கொண்டனர். இந்தச் சண்டையில் 10 புலிக் கெரில்லா வீரர்கள் வீரமுடன் போராடி முற்றுகை அரண்களை உடைத்துக் கொண்டு மீண்டது, பெரிய போர்ச் சாதனை என்றே சொல்லவேண்டும்.

கெரில்லா வீரர்களைக் கைநழுவ விட்ட இராணுவத்தினர், அச்சுவேலிக் கிராமத்திலுள்ள 50 அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு பயங்கவாதிகள் என்ற முத்திரைகுத்தி, ‘வெற்றி வாகை’ சூடிக்கொண்டனர். சிறீலங்கா அரசின் இந்தப் பொய்ப் பிரச்சாரமானது, தமிழ் மக்களின் மனவுறுதியைத் தளர வைத்து, சிங்கள ஆயுதப்படைக்கு ஊக்கத்தை அளிக்கும் நாசகார நோக்கத்தைக் கொண்டது. வெறும் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் தமிழரின் சுதந்திரப் போரட்டத்தை நசுக்கிவிட முடியாது என்பதை, சிங்கள அரசுக்கு நாம் உணர்த்தப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.