பாடுநிலாவே பாகம் 16

அவர்கள் நால்வரையும் சுமந்து புறப்பட்டது அந்த எயார் இந்திய விமானம். தன்னை விடுதியில் விட்டுவிட்டே போகுமாறு கேட்டுக்கொண்ட சாதனாவின் வேண்டுகோளை நிராகரிக்கமுடியாத காங்கேசனின் குடும்பம்,
அவள் சொன்னபடியே செய்தது. அவர்கள் அனைவரிடமும் விடைபெற்றவள், அங்கிருந்த பராமரிப்பு பெண்ணுடன் உள்ளே சென்றாள். காங்கேசனுக்கு இதயம் வலித்தபோதும் வேறுவழியின்றி வாகனத்தில் ஏறினான்.
அவளைப் பார்த்தபடியே சென்றவன், ஆசனத்தில் சாய்ந்துகொண்டான், ‘கடைசியில் சாதனா சொன்னபடியே செய்துவிட்டாளே, அவனோடு வரவில்லையே. ஒரு நாளாவது அவனது வீட்டில் தங்கிவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்து விட்டாளே’ மனம் ஆற்றாமையில் அரற்றியது அவனுக்கு.

அவனது அருகில் இருந்த தாயார் அவனை நன்றாகப் பார்த்தார், அவனது தலையை மெல்ல கோதியவர், “காங்கேசன், நீ எதுக்காக வருத்தப்படுறே? அவதான் எங்களுக்கு ரொம்ப கிட்டத்தில வந்திட்டால்லே, அப்புறம் என்ன, சீக்கீரமே நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திடலாம், அவ வித்தியாசமான பொண்ணு, நம்ம வீட்ல வந்திருந்து, ஒவ்வொண்ணுக்கும் நம்மளை எதிர்பாக்கிறதை அவ விரும்பமாட்டா, நீ அவ புருசனா இருந்திருந்தா பரவாயில்ல, அவ நண்பன், உன்கிட்ட எப்பிடி அவ எல்லாத்தையும் கேப்பா? சொல்லு?”

“உங்ககிட்ட கேக்கலாமே அம்மா?”

“டேய்---எனக்கு கஸ்ரம் தர்றதா நினைப்பா, காலம் எல்லாத்தையும் சரி பண்ணிடும், விடு, அவமேல உனக்கிருக்கிற பிரியம் எங்களுக்குப் புரியுது, ஏன் அவளுக்கே புரியுது, ஆனாலும் மத்தவங்கள மாதிரி அவ வளரலைடா, அதனாலேயே ஒரு இறுக்கம் அவளுக்குள்ள, அவ என்ன பண்ணுவா, பிஞ்சு வயசிலயே ஏராளமான இழப்புகள், தான் தனிதான் என்று தனியான பதிவோட வாழ்ந்தவ, அவங்கப்பா கூட அவ மனசில ஒட்டல, விலகின மாதிரியே வாழ்ந்திட்டா, நீ தான் அவளைப் புரிஞ்சு நடக்கணும் கண்ணா என்றார்”
“சரிம்மா---“
விழியோரம் வியர்த்தபோதும் சமாளித்துக்கொண்டான்.

மறுநாள் அதிகாலையிலேயே அமளிப்பட்டது காங்கேசனின் வீடு.
அப்போதுதான் எழுந்து வந்த தாயார், வெளியில் செல்லத் தயாராக நின்ற காங்கேசனையும் அவனது அண்ணனையும் கண்டதும்
“என்னங்கடா, எங்க கிளம்பிட்டிங்க?” என்றார்.
“அது----அது –சாதனாவைப் பாத்து, அண்ணாதான் அவ கண்ணை சோதிச்சு பாத்தாத்தானே மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பாக்கலாம் என்றான், அதான்”
“டேய் ---இது உனக்கே நல்லா இருக்கா, சாதனாவைப் பாக்கலாம்னு சொன்னது உண்மை, ஆனா, அதுக்காக இந்த விடிஞ்சும் விடியாத பொழுதில வந்து, என்னை எழுப்பி, இந்த குளிரில குளிக்கவைச்சு, கூட்டிப்போகப்போறது நீ, என் மேல பந்தை உருட்டிவிடுறியா?” என்றான் பகலவன்.
புன்னகையோடு தலையை ஆட்டிய தாயார் “சரி, போயிட்டு வாங்க” என்றார்.

அப்பாடா என்றபடி அவசரமாய் தமையனையும் இழுத்துக்கொண்டு நடந்தான் காங்கேசன்.
“இந்தாங்கடா கார் சாவி,” என்றபடி விரைந்து வந்தார் காங்கேசனின் தகப்பனார்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் அண்ணனும் தம்பியும்.

தொடரும்

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.