புலிகள் வந்துவிட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டி இங்கு தரித்து நிற்க இராணுவம் முயற்சி

“இராணுவம்தான் பொம்மைகளையும் பொருள்களையும் தந்து இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள். பொய்யாக வழக்குகளைப் புனைந்து புலிகள் வந்துவிட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டி இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள். வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள்
என்றால் அது அவர்கள் கடமை. அதையும் செய்யாது விட்டால் வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் போய் அரசு எதைக் கூறப் போகின்றார்கள்?

இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரந்த கேள்வி பதில் அறிக்கை என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் என தொடர்ச்சியாக தாங்கள் கூறிவரும் நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என கூறுவதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க கூறுகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: மகேஷ் சேனநாயக எனது நண்பர். தொடக்கத்தில் வந்த போது அவரே என்னிடம் கூறினார், “இராணுவம் பற்றிய உள்நாட்டு வெளிநாட்டு மக்களின் கருத்து மிக மோசமாக அமைந்துள்ளது என்றும் அதனை மாற்றத் தான் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும்”- அவ்வாறே அவர் செய்தார்.
கீரிமலைக்குப் போகும் வழியில் நல்லிணக்கபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். இவ்வாறு பல காரணிகளால் இராணுவம் பற்றிய மக்களின் கருத்துக்களை மாற்ற அவர் எத்தனித்தார். அரசுக்கு அவர் செய்ய வேண்டிய கடமைகளை அவர் கச்சிதமாகச் செய்து கொண்டு போகின்றார். ஆனால் அவர் அரசியல்வாதிகள் போல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
இராணுவத் தளபதி அரசின் ஒரு அலுவலர். அரசு கூறுவனவற்றை செய்ய வேண்டிய கடப்பாடு உடையவர். “பயந்து ஒளிந்தவர்கள்” என்று என்னைத் தான் குறிப்பிட்டிருந்தால் நான் 1987இல் இருந்து தொடர்ச்சியாக தெற்கிலேயே இருந்தவன். 1983இல் மல்லாகத்தில் இராணுவம் செய்த அட்டகாசங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றிய இறப்பு விசாரணைகளை வேறெவரும் செய்ய முன்வராத நிலையில் நானே செய்தவன். ஆகவே பயந்து ஒளிய வேண்டிய காரணங்கள் எவையும் எமக்கிருக்கவில்லை.
மக்கள் பயந்து ஒளிந்தது இராணுவத்திற்கே. 1960களில் வந்த இராணுவத்தின் நிமித்தம் மக்கள் பயந்தனர். பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியம்பிள்ளை காரணமாக இளையோர்கள் பயந்தொளிந்தனர். போரின் போது கண்மூடித்தனமாய் விடுத்த குண்டு வீச்சுக்களால் மக்கள் ஓடி ஒளிந்தனர். திடீரென்று வந்து மக்களபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமுமில்லை, இராணுவம் பிழையேதும் எத்தருணத்திலும் செய்யவில்லை என்றும் அர்த்தமில்லை.
நான் 2013ஆம் ஆண்டில் இருந்து இராணுவத்தை வெளியேறச் சொல்லி வருகின்றேன். இராணுவந் தான் பொம்மைகளையும் பொருள்களையுந் தந்து இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள். பொய்யாக வழக்குகளைப் புனைந்து புலிகள் வந்துவிட்டார்கள என்று பூச்சாண்டி காட்டி இங்கு தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள்.

வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமை. அதையும் செய்யாது விட்டால் வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் போய் அரசு எதைக் கூறப் போகின்றார்கள்? – என்றுள்ளார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.