அரசியல் நாடகமாடுகின்றது தமிழ் முற்போக்கு கூட்டணி !!

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நாடகமாடி வருகின்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களுள் ஒருவரான கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் வெளியிட்டு வரும் கருத்து தொடர்பாக கூறும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை யார் பெற்றுக்கொடுத்தாலும் அதனை நாம் வரவேற்போம். எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணி, கூட்டு ஒப்பந்தத்தை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கின்றோம்.

கூட்டு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் போலியான பிரசாரத்தை முன்னெடுத்துவரும் கூட்டணிக்கு, உண்மையில், கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கூடிய இயலுமைக் காணப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கியத் தொடர்பை பேணி வருவதாகவும் அரசாங்கத்தில் இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களைக் கொண்டிருப்பதாகவும் மார்தட்டிகொள்ளும் கூட்டணிக்கு, ஐ.தே.கவின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை, கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்ற ஏன் முடியவில்லை ?

1992ஆம் ஆண்டு நாடாளுமன்றில் கொண்டுரவப்பட்ட பிரேரணை ஒன்றினூடாகவே கூட்டு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இப்பிரேரணைக்கு எதிராக, கூட்டு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதனூடாக ஒப்பந்தத்தை இரத்து செய்ய முடியும்.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்யக்கூடிய இயலுமை தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இருக்கின்ற போதிலும் அதனை செய்யாது கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், இ.தொ.காவை குறைகூறியே அரசியல் செய்கின்றது“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.