திருகோணமலை இளைஞர்களின் உயிரிழப்பிற்கு நீதி விசாரணை வேண்டும்!!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கடலில் குதித்து உயிரிழந்த இளைஞர்களின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இரு அப்பாவி இளைஞர்கள் கடந்த ஜனவரி 29ஆம் திகதி கிண்ணியாவில் உயிரிழந்தனர்.

திருகோணமலை கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு, அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அச்சத்தில் குறித்த இளைஞர்கள் கடலில் பாய்ந்ததில் அவர்கள் உயிரிழந்தனர்.

மண் அகழ்வுக்கான சட்டபூர்வ அனுமதி பத்திரத்துடனேயே அவர்கள் இதனை செய்து வருகின்றனர். நாட்டில் எவ்வளவோ பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனால், அதனைவிடுத்து அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதேபோன்ற சம்பவம் மணலாறு பிரதேசத்திலும் இடம்பெற்றுள்ளது. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் யுத்தத்தின் பின்பும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்க வேண்டும். அது மாத்திரமின்றி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.