ஒரு வீரனின் உறவுகளின் தவிப்பு!!

``கல்யாணத்துக்குப் பிறகு மூணு முறைதான் ஊருக்கு வந்துருக்காப்டி. இன்னும் வாழ வேண்டியது எவ்ளோ கெடக்கு. அதுக்குள்ள இப்புடி உசுர தியாகம் பண்ணிட்டானே!"

``எம்மவனுக்கு சின்ன வயசுல இருந்தே மிலிட்டரியில சேரணும்னுதான்யா ஆசை. 5 வருஷத்துக்கு முன்னாலதான் வேலையில சேர்ந்தான். எங்க குடும்பத்துக்கு குலசாமியா நின்னு எங்களை எல்லாம் காப்பாத்திட்டு இருந்த பையன் இன்னிக்கு என்னையும் எம்பொண்டாட்டியையும் மட்டுமல்லாம அவன் மனைவியையும் தவிக்க விட்டுட்டுப் போயி சேர்ந்துட்டானேய்யா. எய்யா சாமி நீ செத்துட்டேன்னு இந்த ஊரு ஆளுங்க சொல்றதெல்லாம் பொய்யா போயிடக் கூடாதா. பொழச்சிக் கெடந்தா வந்துடுய்யா உம் பொண்டாட்டி துடியா துடிக்கிறாய்யா!” என்றபடி கத்திக்கூப்பாடு போடுகிறார் கணபதி. அவரின் கதறல் நம் நெஞ்சை உலுக்குகிறது.

நேற்று காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பதற வைத்திருக்கிறது. தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள். அவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய சுப்ரமணியனும் ஒருவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரமணியனின் குடும்பத்தினருக்குத் தகவல் சென்று சேர்ந்ததும் சவலப்பேரி கிராமத்தினர் துக்கத்தில் உழன்று கிடக்கிறார்கள்.

“அய்யா எம்மவன் போன ஞாயித்துக்கிழமைதான்யா ஊருக்குத் திரும்பிப் போனான். பொங்கலுக்கு 1 மாச லீவுக்கு வந்திருந்தான். அவன் வந்திருந்த ஒரு மாசமும் எப்படிக் கழிஞ்சதுன்னே தெரியல. வியாழக்கிழமை எனக்குக் கண் ஆபரேஷன் பண்ண ஆஸ்பத்திரிக்குக் கூடவே வந்திருந்தான். வெள்ளி, சனி ரெண்டு நாளும் எல்லார்கூடவும் சந்தோஷமா இருந்துட்டு ஞாயித்துக்கிழமைதான்யா திரும்பவும் லீவு முடிஞ்சு வேலைக்குக் கிளம்பிப் போனான். நேத்து மதியம்கூட என் மருமக கிருஷ்ணவேணிக்குப் போன் பண்ணி பேசியிருக்கான். அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சு ஒன்றரை வருஷம்தான் ஆகுது. இன்னும் கொழந்த குட்டிகூட இல்ல. இப்போ வந்துருந்தவன்கிட்டக்கூட நானும் உன் அம்மாவும் தூக்கிக் கொஞ்ச வாரிசு வேணும்டா. என் கண் காண நான் அதுங்களைப் பாத்துட்டுப் போயிடனும்டான்னு சொல்லிட்டு இருந்தேன். அதுக்குள்ள இப்புடி ஆயிடுச்சேய்யா.

எங்களுக்கும் ஊருக்காரவுக எல்லாருக்கும் வாட்ஸ் அப், டிவியில பாத்துதான் விஷயமே தெரிஞ்சது. அவன் பேரு முகவரியோட தெளிவா கொடுத்துருக்காங்கய்யா. கிராமத்துல இருக்கிற எல்லா சனங்களும் கூடிட்டாங்க. இப்போ வீட்டக்குள்ளேயே போக முடியாத அளவுக்குக் கூட்டமா இருக்கு. டி.எஸ்.பி ஐயாவும் வந்துருக்காங்க. ஆனாலும், இதெல்லாம் கனவா போயிடக் கூடாதா. பொய்யாகிடக் கூடாதான்னு மனசு கெடந்து அடிச்சிக்கிது. அவன் பொண்டாட்டியும் அம்மாவும் அழுகுறதை என் கண் கொண்டு பார்க்க முடியல சாமி” என்று கதறி அழுதவரிடமிருந்து அருகே இருந்த வேறு ஒருவர் தொலைபேசியை வாங்கி,

“நான், சுப்ரமணியோட மாமா பேசுறேங்க. அவன் ரொம்ப நல்ல மனுஷங்க. சின்ன வயசுல இருந்தே நாட்டுக்காக சேவை செய்யணும்ங்கிறது மட்டும்தான் சுப்ரமணியோட ஆசை. அவன் அப்பா தமிழ்நாடு போலீஸ் ட்ரெயினிங்க்காக ராஜபாளையத்துல பீஸ் கட்டி சேத்து விட்டுருந்தாரு. ஆனா, அப்போ அறிவிப்பு வர தாமதமானதால மதுரை சிஆர்பிஎஃப்-க்கு ஆள் எடுக்கிறாங்கன்னு சொல்லி பிரெண்டோட போயி சேர்ந்துட்டான். வேலைக்குச் சேர்ந்த நாலு வருஷம் கழிச்சுதான் சொந்தத்துலயே பொண்ணு பார்த்து கல்யாணம் கட்டி வெச்சோம். கல்யாணத்துக்குப் பிறகு மூணு முறைதான் ஊருக்கு வந்துருக்காப்டி. இன்னும் வாழ வேண்டியது எவ்ளோ கெடக்கு. அதுக்குள்ள இப்புடி உசுர தியாகம் பண்ணிட்டானேன்னு நெனச்சு எங்க சனங்களுக்கு பொறுக்க முடியலைங்க. அவன் அப்பா சொல்றாப்புல இது பொய்யா போயிடக் கூடாதுன்னுதான் நெனைக்கத் தோணுது” என்கிறார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.