சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது – யாழ். நீதிபதி எச்சரிக்கை!

சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. காதாரச் சீர்கேடுகள் இடம்பெறுகின்றன என்றால் அவற்றைத் தடுக்க வழிமுறைகள் உள்ளன.
அவற்றை உரிமுறையில் பின்பற்றவேண்டும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர் என போலி அடையாள அட்டையைத் தயாரித்து பணியாற்றி வந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகிய இளைஞனை எச்சரித்து விடுத்த போதே நீதிவான் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு சுகாதாரச் சீர்கேடு தொடர்பாக பலமுறை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே யாழிலுள்ள பிரபல கல்லூரியின் பழைய மாணவன் ஒருவர், போலி ஆவணங்களைத் தயாரித்து சுகாதாரப் பரிசோதகர் சேவையைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அந்த இளைஞன் பொதுச் சுகாதாரப் பரிசோதர் சேவைக்கான போலி அடையாள அட்டையை தனது பெயரில் தயாரித்து வியாபார நிலையங்களுக்குச் சென்று காலாவதியான மற்றும் சுகாதார சீர்கேடான உணவுப் பண்டங்களை அழித்துள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர் ஒருவரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. அதுதொடர்பாக விசாரணைக்கு பொலிஸார் அழைத்த போதும் அந்த இளைஞன் செல்லவில்லை.

இந்த நிலையில் இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். அதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் இளைஞன் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணை உத்தரவை நிறைவேற்றிய பொலிஸார், இளைஞனைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நேற்று(வியாழக்கிழமை) நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

“சந்தேகநபர் சட்டத்துக்கு புறம்பாகச் செயற்படும் நோக்குடன் நடந்துகொள்ளவில்லை. அவர் சமூக அக்கறை கொண்டே இவ்வாறு செயற்பட்டார்.

அதனால் அவரை இந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுக்கவேண்டும்” என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இளைஞனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையைக் கோரி முறைப்பாடு வழங்கவில்லை. அவரை எச்சரிக்கவேண்டும் என்ற நோக்குடனேயே முறைப்பாட்டை வழங்கினேன்.

எனவே வழக்கை முன்னெடுக்க நான் விரும்பவில்லை என முறைப்பாட்டாளரான வர்த்தகர் மன்றில் முன்னிலையாகித் தெரிவித்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இளைஞனை எச்சரிக்கை செய்து விடுத்தார். வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.