வரலாறு மீண்டும் திரும்புகிறதா?

1956ம் ஆண்டு திருமலையில் சுதந்திரநாள் அன்று நடராஜன் என்பவர் கறுப்புகொடியை ஏற்றியபோது பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அன்று முதல் பலதடவை தமிழ் இளைஞர்களால் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்டிருக்கிறது. கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது.

இத்தகைய போராட்டங்களே பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

இத்தகைய கடந்தகால வரலாறு மீண்டும் திரும்புகிறது. இன்று  யாழ் பல்கலைகழகத்தில் இலங்கை தேசியக்கொடி பறந்த இடத்தில் மாணவாத்களால் கறுப்பு கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

இலங்கையின் 71வது சுதந்திரதினம் தமிழ் மக்களின் கரிநாளாக அனுட்டிக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இன்று கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை தருமாறு கோரி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

700 நாட்களுக்கு மேலாக போராடி வரும் காணாமல் போனவர்களின் உறவுகளும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் இத்தகைய எதிர்ப்பு போராட்;டங்களில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

71வது சுதந்திரதினத்தை கொண்டாடும் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தெரிவித்துள்ளனர். தமிழ் மக்கள் எதிர்பார்த்து இருக்கும் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்று இருவரும் தெரிவித்துள்ளார்கள்.

தீர்வு பெற்று தருவோம் என்று கூறிவந்த இந்திய அரசும் காலம் மாறிவிட்டது. அதற்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது இனி சமஸ்டி என்று பேசிக்கொண்டிருக்ககூடாது என்று தெளிவாக கூறிவிட்டது.

பாராளுமன்றபாதை மூலம் தீர்வு பெறலாம் என கூறிவந்த தமிழ் தலைவர்கள் இனி என்ன கூறி தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த நாளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள் உள்ளது. அதாவது,

(1) சிலர் கூறுவதுபோல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தானாக வழங்கிவிட்டு செல்லவில்லை. அவ்வாறு கூறுவது இலங்கை மக்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்துவதாகும்.

(2) சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் கரி நாள் ஆகும். ஏனெனில் ஆட்சி அதிகாரம் வெள்ளையரிடமிருந்து கொள்ளையரிடம் கைமாறியுள்ளதே தவிர மக்களிடம் கிடைக்கவில்லை.

குறிப்பு - முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்களை கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் 1971ல் 6000 சிங்களவர்களையும் 1989ல் 60000 சிங்கள மக்களையும் கொன்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுபோலவே 1971ல் கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே இலங்கை ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களை பாலியல்வல்லுறவு செய்து கொன்றார்கள் என்பதையும் மறந்தவிடக்கூடாது.

இதே இலங்கையில்தான் ஒருபுறம் சிங்களவரான மகிந்தவின் பிள்ளைகள் குதிரை சவாரி செய்வதற்காக லண்டன் மகாராணியின் குதிரை இறக்குமதி செய்யப்படும்வேளை மறுபுறத்தில்  வறுமையின் கொடுமையால் தன் மகளை விபச்சாரத்தில் தள்ளிய குற்றச்சாட்டில் சிங்களதாய் ஒருவர் கைது செய்யப்படுகிற அவலமும் நடக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.