ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் இருவர் கைது!
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14 -ஆம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 38 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, புல்வாமா, பூஞ்ச் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வேட்டையில், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான இரண்டு தீவிரவாதிகள் மூன்று தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கபப்டும் இருவர், உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓபி சிங் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் அகமது, புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அக்யுப் அகமது மாலிக் ஆகிய இருவரை மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள டியோபந்த் எனும் இடங்களில் நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷாநவாஸ் அகமது, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிப்பொருள்களை கையாளுவதிலும் கைதேர்ந்தவன் என்பதும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும், ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சிங் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை