அவளுக்கென்றொரு கனவு!! சிறுகதை


‘காலம் மாறும், எழும்புங்கோ,  உடல் பலத்தைவிட மனபலம் பெரிசு, உங்களால நிறையச் சாதிக்கமுடியும், தனிமை எண்டு நினைக்காதேங்கோ, இனி தனிய இல்ல, நானிருக்கிறன், இல்ல இல்ல, நாங்கள் இருக்கிறம்‘ கை நீட்டிய கானகனை ஆச்சரியமாகப் பார்த்தபடி தானும் அவனது கரத்தினைப் பற்றி எழுந்துகொண்டாள் காவ்யா.


விடிகாலைப் பொழுதின் ஒளி மெல்ல மெல்ல உலகை வியாபித்தது. பறவைகள் கீச்சிட்டுப் பறக்கும் ஒலி காதை நிறைத்தது. பனிக்குளிர் உடலை அதிகமாய் தாக்கியது.
உடலை ஒரு பந்தெனச் சுருட்டிப் படுத்திருந்தாள் காவ்யா. ஊசி என குத்திய குளிரின் தாக்கமும் நாவறண்ட தாகமும் ‘ யாரேனும் ஒரு கப் தண்ணீர் தரமாட்டார்களா என எண்ணவைத்தது அவளை. அவளது எண்ணம் வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை எண்ணியதும் இரண்டு பெரிய நீா்முத்துக்கள் கண்களில் வடிந்து கன்னத்தில் உருண்டு தலையைணையில் சிதறியது.

பத்து நாட்களாக எழுந்திருக்கமுடியாது படுத்திருக்கின்றாள். கடும் காய்ச்சலும் இருமலும் சோ்ந்து அவளை வாட்டி எடுத்தது. அவ்வப்போது எழுந்து வெறும் தேனீரையோ தேசிக்காய் கரைத்த தண்ணியையோ குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டாள். அவளை சாப்பிடு என்று சொல்லவோ, அல்லது சாப்பாடு தரவோ அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை. அந்த உண்மையை மனதில் நன்றாக பதித்துக்கொண்டவள் என்பதால் தானே எதையாவது வயிற்றுக்குள் நீராக ஊற்றிக்கொண்டாள். இப்போதும் அதே எண்ணம் தோன்ற எழுந்திருக்க முயற்சி செய்தாள்.

தலை ‘விண் விண்ணெனத் தெறித்தது. மெல்ல எழுந்துகொண்டாள். சுவரிலே பிடித்தபடியே சமையலறைச் சுவருக்கு அருகிலே வந்தாள். பத்து நாட்களுக்கும் அதிகமாக மூட்டப்படாத அடுப்பு அழுக்காகிக் கிடந்தது. முதலில் அடுப்படியைச் சுத்தம் செய்வோம் என எண்ணியபடி குனிந்தவள், அப்படியே அசையமாட்டாமல் நின்றாள். உலகம் தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது.

சட்டென சுவருக்கு  கையைக் கொடுத்து அழுத்தமாகப் பற்றிக்கொண்டாள். அசையமுடியாதபடி உடம்பு ஆடியது. நின்றவாறே ஓரளவிற்கு தன்னை நிதானப்படுத்திக்கொண்டவள், கீழே சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாள். வயிற்றினுள் எதையாவது அனுப்பாதவைரை எதையுமே செய்யமுடியாது என்பது புரிந்தது.  துாசும் மண்ணுமான தரை வேறொரு நிறம் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அருகில் இருந்த சுள்ளிகளை ஒன்றாக்கி அடுப்பபைப் பற்றவைத்தாள். கொழுந்துவிட்ட தீயில் அவளது உடல் அதிகமாய் தகித்தது. அருகிலிருந்த பானையை இழுத்தாள், அதில் எப்போதோ எடுத்துவைத்த தண்ணீா் சிறிது இருந்தது. தனியே கிணற்றடிக்குச்சென்று தண்ணீா் எடுத்துவருமளவிற்கு உடம்பில் தெம்பில்லை என்பதை உணா்ந்தவளாக ‘கொதித்த நீரில் கிருமி செத்துவிடும் தானே‘ என மனதிற்குள் நினைத்துக்கொண்டே இருந்த தண்ணீரை சின்னப் பானையில் ஊற்றி கொதிக்கவைத்தாள்.

ஸ்ஸ்ஸ்........என்ற சத்தத்தில் இரைந்தது நீர்ப்பானை. தலையின் கனம் தாங்காது சுவரோடு ஒண்டிக்கொண்டாள் காவ்யா. கொழுந்துவிட்ட தீயோடு சோ்ந்து அவளது நினைவுகளும் கொழுந்துவிட்டது.

அவள் வீட்டின் மூத்தமகள். அவளுக்குப் பின்னா் நான்கு சகோதரர்கள் இருந்தனா். இரண்டு தம்பி, இரண்டு தங்கை என பெரியதொரு குடும்பத்தின் முதல் வாரிசான அவளுக்கு ஏனோ சிறுவயது முதலே வீட்டுப் பொறுப்பு கூடவே வளர்ந்திருந்தது. கூலிவேலை செய்யும் தந்தை, நோயாளியான தாய், அவா்களின் வலிகளை சுமந்துகொண்ட முதல் மகவு அவள். நோயாளி என்றாலும் கணவனின் விருப்பின்படியே வாழ்ந்து பழகிப்போனதாலோ என்னவோ ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாள் அந்த மகராசி. ‘படைச்சவன் படிஅளப்பான்‘ எப்போதும் பாமரத்தனமாய் இந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொள்வார் தகப்பனாரான முருகேசு.

தன் பின்னால் பிறந்தவா்களை குளிப்பபாட்டுவது, சோறுாட்டுவது என்று படிப்பை விட வீட்டுவேலையில்தான் அதிகமாய் கழிந்தது அவளது பொழுதுகள். சின்னவா்களுக்கு, தடிமன், காய்ச்சல் என்றாலோ தாய்க்கு உடம்பு முடியவில்லை என்றாலோ அடிக்கடி பாடசாலைக்குச் செல்லாமல் நின்றுவிடுவாள்.  எட்டு வயதிலேயே குழந்தைகளைப் பராமரிக்கவும் பத்து வயதிலேயே சமையல் வேலையையும் கற்றுக்கொண்ட கெட்டிக்காரி அவள். அவளது கனிவும் பொறுமையும் தாய் தகப்பனை மகிழ்வித்தது, அதுவே அவளது வாழ்க்கைக்கு எதிராகவும் மாறிப்போனது.

காலம் விரைந்து நகா்ந்தது. வீட்டின் மீதான அவளது கடமை உணர்வு, நாட்டின் மீது திரும்பத் தொடங்கியது. அது யுத்தகாலம், யாழ்விட்டு மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்த காலம் அது. கிளாலிக் கடற்கரையில் வரிசையில் நின்று வள்ளத்தில் மிதந்து வன்னியை அடைந்தது அவளது குடும்பமும். நுளம்புக்கடியும் மலேரியாவும் வதைத்தெடுத்த காலம் அது, வன்னியில் தருமபுரம் மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் தஞ்சம் புகுந்திருந்தனா் அவா்கள். பல குடும்பங்கள் பணக்காரர், ஏழைகள் என்ற வேறுபாடு காணமுடியாதபடி ஒன்றாக இருந்தனா். கிடுகுக்கொட்டகைகள் தலைக்கு மேலே காத்தது. போராளிகளால் வழங்கப்பட்ட உணவுகள் வயிற்றை நிரப்பியது. அப்போதுதான் அவளது சிந்தனை தேசத்தின் பால் திரும்பியது. வீட்டின் மீது தான் கொண்டிருந்த நேசம், உண்மையென்றால் அவா்களின் எதிர்கால வாழ்க்கை கருதி போராடச் செல்வதே சரியென எண்ணினாள். தன் எண்ணப்படியே உணவு வழங்க வந்தவா்களோடு சோ்ந்துகொண்டாள்.

‘நீதான் உன்ர வீட்டுக்கு சாப்பாடு வாங்க வருவாய், தம்பியை பிராக்கு காட்டி சாப்பிடச் செய்வாய், அம்மாவுக்கு மருந்து குடுப்பாய் எங்களோட வந்தால் அதை யார் செய்யிறது?‘ பகிடியாய் கேட்ட பொறுப்பாளா் அக்காவிடம், அதை இனி மற்றவையள் பாக்கட்டும், நீங்கள் அவையளுக்கு வெளியில ஒரு குடிசை குடுத்து,  அப்பாக்கு ஏதாவது ஒரு சின்ன வேலையும் குடுத்தாபோதும், அவையளுக்காகத்தானே  நான் உங்களோட வாறன்‘ அவள் தீா்க்கமாய் பதில் கொடுத்தாள். அவளது விருப்பம் எழுத்துவடிவமாகி தலைமைக்குச் சென்றது.  

 அவளது முடிவு தெரிந்து குடும்பம் அழுதது. அவளது வேண்டுகோளுக்காக, அவளது குடும்பத்தினரை வெளியே சிறிய காணி ஒன்றில் தங்கச்செய்தனா். அதன் பின்னா் அவளுக்கும் வீட்டிற்குமான உறவு நீண்ட இடைவெளிகள் கொண்டதாக மாறிப்போனது. சிறந்த ஆற்றலுள்ள போராளியான அவள், பல களங்களைக் கண்டாள். விழுப்புண்களைச் சுமந்தாள். இடையிடையே வீட்டுக்கு வருவாள். ‘வந்துவிடேன்‘ என்ற அம்மாவின் வார்த்தைகளுக்கு, சின்னதாக ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்துவிட்டுச் சென்றுவிடுவாள். அவள் வந்தால் வீட்டில், மீன்குளம்பு, கருவாட்டுப் பொரியல் என்று சமையல் அமர்க்களப்படும்.

கொதித்த தண்ணீர் குமிழியிடுவதை அவதானித்தவள், தேயிலையைப்போட்டு தண்ணீரை ஊற்றிவிட்டு சீனிப்போத்தலை எடுத்தபோதுதான் அது காலியாக இருப்பது தெரிந்தது. பிளாஸ்ரிக் வாளியை அடிவரை தேடினாள். எப்போதோ வாங்கிய சக்கரையின் சிறிய துண்டொன்று தட்டப்பட்டு கையில் பிசுபிசுத்தது. எடுத்து வாயில் கடித்தபடி தேனீரை உறிஞ்சத்தொடங்கினாள். நினைவுகள் அவளைவிட வேகமாய் நகர்ந்தது.

காலம் ஓடியது, தாயார்  நோயினால் இறந்த போது அவளுக்கு தகவல் வந்தது, வந்தாள், கண்மூடி மீளாத துயிலில் ஆழ்ந்திருந்த தாயைக் கண்டதும் கண்ணீர் அருவியாகி ஓடியது. தான் ஒரு போராளி என்பதை மறந்தாள். தந்தையின் தோளில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். சகோதர்கள் அவளைச் சூழ்ந்துகொண்டு கதறிய போது அவள் உருகி உடைந்துபோனதென்னவோ உண்மை. ஆனாலும் காரியங்கள் முடிந்ததும் அவள் புறப்பட்டுவிட்டாள்,

‘என்னம்மா? போறியா?‘ என்ற தந்தையின் கேள்விக்கு,

‘அப்பா, இதைவிட பெரிய பொறுப்பு அங்க எனக்கிருக்கு,‘ சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்.  

இறுதி யுத்தம் கோரமாக வாய் பிளந்தபோது அவளது குடும்பமும் அகப்பட்டுக்கொண்டது. சரணடைதல் என்ற வார்த்தையை உச்சரிக்கவே விரும்பாத அவளும் சரணடைந்தாள். சகோதரர்கள் இருவா் குடும்பமாகியிருந்தனா். தந்தையோடும் மற்ற இருவரோடும் அவள் செல்ல எண்ணியதும், ‘ அக்கா, சொல்றன் எண்டு குறை நினைக்காதை, நீ எங்களோட வந்தால்  தம்பிக்கும் தங்கச்சிக்கும் ஆபத்து, அதனால‘ இழுத்தவன் மூத்த தம்பி.

சுரீலென்னற வலி முதல் முறையாக அவளைத் தாக்கியது. மௌனமாக விலகிக்கொண்டாள். அவளுக்கானவா்களோடு சென்றுவிட்டாள். தடுப்பு முகாமில் எப்போதாவது வந்து செல்லும் அப்பாவைத் தவிர வேறு உறவுகள் வந்ததில்லை. அவா்கள் சொன்ன காரணமும் நியாயமானதாக இருக்கவே அவளும் விட்டுவிட்டாள். விடுதலையாகி வந்தாள். ஒரு தையல் கடையில் கேட்டு வேலைக்குச் சென்றாள். தடுப்பிலே மனம்வைத்து தையல் பழகியது வாழ்க்கைக்கு கைகொடுத்தது.

அவளோடு ஒட்டிக்கொண்டனர் சகோதரர்கள். மாறி மாறி பிள்ளைகளின் படிப்பிற்கு என்றும், சமைக்கவில்லை என்றும் வந்து நின்ற கூடப்பிறந்தவா்களை அவளால் தள்ளிவைக்க முடியவில்லை. ஏன் மனவிருப்போடு அவா்களுக்கானதைப் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அவளிடம் காசு இருந்தால் கூட நின்றனா். அவளிடம் காசில்லை என்பது தெரிந்தால் விலகி நின்றனா். காசாவது அவா்களை அருகில் வரவைக்கிறதே என எண்ணுவாள் காவ்யா. தன்னை உருக்கி அவள் கொடுப்பதை அவா்கள் புரிந்துகொள்வார்கள் என்றே அவள் நம்பினாள். அவளுக்கு இரண்டு லட்சம் லோன் வந்தது. நான்கு பேரும் ஏதேதோ காரணங்கள் சொல்லி ஆளுக்கு ஐம்பதாயிரமாக வாங்கிக்கொண்டனா். தன் உணர்வுகளை அவா்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதை அவள் உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.  அவளைப் பார்த்து கண்ணீர் வடிப்தை தவிர தந்தையால்  வேறெதையும் செய்யமுடியவில்லை.

தந்தையார் இறந்து, அவா்களது சொந்த காணியை பிரித்து எழுதும் போதும் கூட ‘அக்காவுக்கு என்னத்துக்கு, அவள், ஒண்டிக்கட்டை, பிள்ளையா, குட்டியா‘ என்றுகூறி அவளுக்கான பங்கை நிராகரித்துவிட்டனர். அவள் இருப்பதற்கு இடம் இல்லாது நின்றபோதுதான், அந்த ஞாபகம் வந்தது. வன்னியில் அவா்கள் இருந்த காணித்துண்டு அப்படியேதானே இருக்கிறது, அம்மா வாழ்ந்த இடம், புறப்பட்டுவிட்டாள். ஒரு வருடமாக அங்கேதான் இருக்கிறாள்.

வீட்டுத்திட்டம் வந்தது, ஓரளவாக கட்டிமுடிக்கும் போது நால்வரும் வந்து நின்றனர். காணியைச் சுற்றிப்பார்த்தனர்.  ‘வீட்டை விற்கமுடியாதா?‘ கேட்டது அவளது தங்கை.

அவளது நிலையை அறிந்தவா் என்பதால் கிராமசேவையாளர், தானே வந்து விற்கமுடியாது என்றும் விற்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதால், வீட்டை என்ர பிள்ளைக்கு எழுது‘ என்றபடி மௌனமாகச் சென்ற தங்கையைப் பார்க்க உண்மையில் அவளுக்கு பரிதாபமாக இருந்தது.  

நினைவுகள் அறுபட, விசும்பி அழத்தொடங்கிளாள். அவளுக்கு மட்டும் ஏனிந்த தலைவிதி? யாருக்கு என்ன செய்துவிட்டாள்?  வீட்டை நேசித்தாள், பின்னர் நாட்டை நேசித்தாள்? அதற்காகவா இப்படி ஒரு தண்டனை?

பாயின் ஓரம் பிய்ந்திருந்தது. அது உரசி உரசி காலில் தளும்பாகியிருந்ததை தடவியபடியே அண்ணாந்து அமர்ந்திருந்தாள். வாசலில் நிழலாடியது. நிமிர்ந்து பார்த்தாள். கானகன்.

அவள் தடுப்பிற்குச் சென்றபோது பலரும் சேர்ந்தே சென்றனர். அதில் கானகனும் ஒருத்தன். அவள் மறந்தேவிட்டிருந்தாள். இன்று திடீரென காணவும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் பார்த்தாள். தன்னுடைய ஏழ்மையும் இயலாமையும் நினைவில் வர உள்ளே கூப்பிடக்கூட தோன்றாது அமர்ந்திருந்தாள். அவனே வந்து அமர்ந்துகொண்டான்.

‘தெரியுதா?‘ என்றான். மெல்ல தலையை ஆட்டினாள் காவ்யா.

‘நீங்கள் எப்படி?‘

‘உங்கட வீட்டில விசாரிச்சு இஞ்ச வந்தனான், உங்கட தம்பிதான் இடம் சொன்னவா்‘

புரியாமல் பார்த்தாள் அவள். ‘நாங்கள் வியப்பாய் பார்த்து பெருமிதப்பட்ட ஒருத்தர் நீங்கள், இப்படி உடைஞ்சுபோனது என்?‘

‘காலம் தான்,‘

விரக்தியாய் வந்தது அவளது பதில்.

‘காலம் மாறும், எழும்புங்கோ,  உடல் பலத்தைவிட மனபலம் பெரிசு, உங்களால நிறையச் சாதிக்கமுடியும், தனிமை எண்டு நினைக்காதேங்கோ, இனி தனிய இல்ல, நானிருக்கிறன், இல்ல இல்ல, நாங்கள் இருக்கிறம்‘ கை நீட்டிய கானகனை ஆச்சரியமாகப் பார்த்தபடி தானும் அவனது கரத்தினைப் பற்றி எழுந்துகொண்டாள் காவ்யா.

முற்றும்.

தமிழரசி 

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo










கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.