முரண்பட்டு நின்ற கட்சிகளை தூர நோக்குடன் ஒன்றுசேர்த்தே கூட்டமைப்பை தம்பி பிரபாகரன் உருவாக்கினார்-விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு எமது இனத்துக்கு நாமே குழிபறித்துக்கொள்ளும் நிலைமை இனிமேலும் வேண்டாம் என்றே தம்பி பிரபாகரன் முரண்பட்டு நின்ற பல்வேறு தமிழ்க் கட்சிகளை தூர நோக்கு சிந்தனையுடன் ஒன்றுசேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் பிராந்திய மகாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபதில் நடைபெற்றபோது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உறையற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், ” பிழை செய்வது மனித சுபாவம் மன்னித்தல் தெய்வசுபாவம் என்பார்கள். யார் பிழை செய்தோம் என்பது முக்கியமல்ல. யாரேனும் பிழைகள் செய்திருந்தால் அவற்றை மன்னித்து கொள்கைகள் அடிப்படையில் சேர்ந்து முன்னேறுவதே நாம் தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய பலத்த சேவையாகும். இதனைத் தம்பி செய்தார். ஏன் எம்மால் முடியாது? ” என்றும் கேள்வி எழுப்பினார்.


தமிழ் மக்களுக்கு தனி சிங்கள சட்டம் , பயங்கரவாத தடை சட்டம், எமது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் 6வது திருத்தச் சட்டம் போன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை இயற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைப்பதற்கும் இலங்கையின் நீதித்துறைக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் முரண்பட்டு உழைத்த அளவுக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ அல்லது காணாமல் போன மக்களின் உறவினர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ அல்லது வட கிழக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்றுவதற்கோ அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கோ நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தோன்றவில்லை என்பது மனவருத்தத்தைத் அளிப்பதாகவும் விக்னேஸ்வரன் வருத்தம் வெளியிட்டார்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் ஏற்படப்போகும் பல ஆபத்துக்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதுடன் தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கோட்பாடுகளை கைவிடச் செய்வதன் மூலம், தீர்வே அவர்களுக்கு வேண்டியதில்லை என்ற ஒரு நிலையினை உருவாக்குவதே இன்றைய இந்த தீர்வு முயற்சியின் நோக்கமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

விக்னேஸ்வரனின் முழுமையான உரை கீழே:

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய மகாநாட்டில் என்னையும் கலந்து கொண்டு உரையாற்ற அழைத்தமைக்காக இந்த நிகழ்வு ஒருங்கமைப்பாளர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் முன்னரும் உங்கள் முன்னணியின் கூட்டங்களுக்கு விசேட விருந்தினராகவோ, பிரதம விருந்தினராகவோ அழைக்கப்பட்டு பங்குபற்றி உள்ளேன். ஆகவே இது முதற் தடவை அல்ல என்பதை இங்கு கூறி வைக்கின்றேன்.

நான் தமிழ் மக்கள் கூட்டணியின் ஸ்தாபகராக இருந்து கொண்டு இன்றைய இந்த ஈ.பி.ஆர்.எல். எவ் கட்சியின் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வது சரியா என்று கேட்டு எனது மின்னஞ்சலுக்கு பலர் கேள்விகளை அனுப்பி இருக்கின்றார்கள். சிலர் இவ்வாறு நான் கலந்து கொள்வது தவறு என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான எனது பதிலை வழங்குவது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகளை நான் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஈ.பி.ஆர்.எல். எவ் கட்சியின் பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு நான் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டேன். அத்துடன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் கூட்டங்களில் ஏற்கனவே நான் கலந்து கொண்டிருந்தமையையும் சற்று நேரத்திற்கு முன்னர் கூறியிருந்தேன். எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் களம் எனக்கு புதிதல்ல.

எமக்குள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு எமது இனத்துக்கு நாமே குழிபறித்துக்கொள்ளும் நிலைமை இனிமேலும் வேண்டாம் என்றே தம்பி பிரபாகரன் முரண்பட்டு நின்ற பல்வேறு தமிழ்க் கட்சிகளை தூர நோக்கு சிந்தனையுடன் ஒன்றுசேர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார். ஆனால், பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கை மாறி பிழையான வழியில் செல்ல முற்பட்டபோது அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர் ஈ.பி.ஆர்.எல். எவ் கட்சியும் வெளியேறி சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் கீழ் ஒரு பொது நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டன. தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட “எழுக தமிழ்” நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயற்திட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் எம்மோடு ஒன்றாக உழைத்திருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அவ்வாறே உழைத்திருக்கின்றது. அதன் தலைவரின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பு வைத்திருந்தவன் நான்.

அதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியை உருவாக்கிய பின்னர் எமது கொள்கைகளை ஏற்று ஒன்றாக செயற்பட்டு எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளியே நிற்கும் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இதற்கு ஈ.பி.ஆர்.எல். எவ், தமிழர் சுயாட்சி கழகம், பசுமை கட்சி ஆகிய கட்சிகள் உடனடியாகவே தமது விருப்பத்தைத் தெரிவித்திருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த கால கசப்பான சம்பவங்களை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு “நான் சுற்றவாளி நீ குற்றவாளி” என்று ஒருவரோடு ஒருவர் நாம் மோதிக்கொண்டிராமல் ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம் செயற்படவேண்டும். இதனையே மக்கள் விரும்புகின்றார்கள். “குற்றம் பார்க்கில் சுற்றமில்லை” என்பது ஆன்றோர் வாக்கு. இந்த அடிப்படையில்த் தான் நான் இன்றைய இந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் கலந்துகொண்டிருக்கின்றேன்.

கடந்த காலத்தில் நாம் விட்ட தவறுகளை உணர்ந்தவர்களாக, கடந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டவர்களாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் நாம் பல கட்சிகளுடன் இணைந்து செயற்படவிருக்கின்றோம். எமது மக்களின் நீண்டகால அபிலாஷைகளைப் பாதிக்கும் வகையிலோ அல்லது கொள்கைகளுக்கு முரணாகவோ எம்மோடு சேர்ந்து பயணிப்பவர் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நானும் விதிவிலக்கல்ல. அமையவிருக்கும் கூட்டணியின் ஒழுக்க விதிகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை என்பவை பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து விரைவில் முடிவுகளை எடுப்போம். கடந்த காலப் பிழைகளை நாம் தொடர்ந்தும் செய்யாதிருப்பதற்கு நாம் யாவரும் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும். To err is human to forgive is Divine என்பார்கள். பிழை செய்வது மனித சுபாவம் மன்னித்தல் தெய்வசுபாவம் என்பார்கள். யார் பிழை செய்தோம் என்பது முக்கியமல்ல. யாரேனும் பிழைகள் செய்திருந்தால் அவற்றை மன்னித்து கொள்கைகள் அடிப்படையில் சேர்ந்து முன்னேறுவதே நாம் தமிழ் மக்களுக்கு செய்யக் கூடிய பலத்த சேவையாகும். இதனைத் தம்பி செய்தார். ஏன் எம்மால் முடியாது? தம்பியின் மிகப் பெரிய எதிரி அந்தக் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்று பல தடவைகள் குறிப்பிட்டிருக்கின்றேன். எவருடனும் எமக்குத் தனிப்பட்ட குரோதமோ, பொறாமையோ, காழ்ப்புணர்வோ இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகலரையும் எனது உடன் பிறந்தோராகத் தான் இன்னமும் கருதுகின்றேன். எனினும் அவர்கள் இட்டுச் செல்லும் வழி தவறானது என்று கூற எமக்கு ஒரு கடப்பாடு உள்ளது. நாம் போகும் வழி தவறானது என்றால் அந்த வழியில் பயணிக்க வந்தவர்கள் எவருமே அதைச் சுட்டிக் காட்ட கடப்பாடு உடையவர்கள். கூட்டமைப்பு தற்போது செல்லும் பாதை எம்மை நாம் அழித்துக்கொள்வதற்கு வழி வகுக்கும் என்பதே எமது கணிப்பீடு. ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகளில் உடன்பாடு இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் எவரும் எம்முடன் இணைய விரும்பினால் அவர்களை அரவணைக்க நாம் தயார் என்று நான் முன்னர் கூறியதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

பொதுமக்கள், கூட்டுக் கட்சிகள், சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆலோசனைகள் மற்றும் காத்திரமான விமர்சனங்களை எல்லாம் சற்றும் கருத்தில் கொள்ளாமல் ஒரு சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. அரசாங்கத்துடன் இணக்கப்படுவது ஒன்றும் அதுபற்றி மக்களுக்கு கூறுவது இன்னொன்றுமாகத் தொடர்ந்தும் ஏமாற்று அரசியலைச் செய்துவருகின்றது. அது எமக்கே உலை வைக்கும் செயல் என்பதே எமது புலனுணர்வு.

நான் நீண்ட கால அரசியலில் திளைத்தவனும் அல்ல ஆயுதக் கலாச்சாரங்களில் உடன்பாடு உடையவனும் அல்ல. எனினும் தமிழின் மீது தீராத பற்றுக் கொண்டவன். தமிழர் வரலாறு பற்றி அறிய விருப்புடையவன். தமிழ் மக்களின் விடுதலையின் மீது அவா உடையவன். அந்த வகையிலேயே சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தலைமைகள் என்னை அணுகி வடமாகாண சபைத் தேர்தலில் கலந்து கொண்டு முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடுமாறு மிகவும் வலிந்து அழைத்தபோது சுமார் 6 மாத கால வற்புறுத்தலின் பின்னர் அதற்கு சம்மதித்தேன்;;;. அந்த அழைப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தமது சராசரி ஒத்துழைப்பை நல்கியிருந்தது. அனைவரும் திரும்பத் திரும்ப அழைத்ததின் பேரில் இறுதியில் நானும் போட்டியிட எனது சம்மதத்தைத் தெரிவித்திருந்தேன். நீங்கள் யாவருஞ் சேர்ந்து என்னை அமோக வெற்றி பெறச் செய்தீர்கள். அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள் பற்றியும் நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள். எனவே அவற்றை மீண்டும் இங்கே பிரஸ்தாபிப்பது பொருத்தமற்றது.

அரசியல் கட்சிகள், ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதைத் தவறாகக் கருத முடியாது. முக்கியமாக ஒரு நோக்கை எவ்வாறு அடைய வேண்டும் என்பதில் நிச்சயம் முரண்பாடுகள் இருப்பன. எல்லோரதும் கருத்தறிந்து முடிவெடுக்கும் என் பாணியையும் பலர் காட்டமாக விமர்சித்துள்ளார்கள். வேகம் அவர்களுக்கு முக்கியம். விவேகம் அன்று. என்ன அடிப்படை நோக்கத்திற்காக பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஆயுதக் குழுக்களையும் சேர்த்து ஒரு கூட்டமைப்பாக முன்னர் உருவாக்கினார்களோ அந்த அடிப்படை நோக்கத்தை உதறித் தள்ளிவிட்டு எமது மேலாதிக்க சிந்தனைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றுவதற்கும், எமது தனிப்பட்ட நலன்களை ஈடேறச் செய்வதற்கும், எமது கருத்துக்களுக்கு எதிரான கருத்துடையவர்களை அழித்தொழிக்க எத்தனிப்பதும், அரசியல் நீரோட்டத்தில் இருந்து அவர்களை வலிந்து வெளியேற்றப் பார்ப்பதும் உண்மையான ஜனநாயகக் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. கூட்டமைப்பு என்பது இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னேற்ற அமைக்கப்பட்ட ஒரு அரசியல் கட்டமைப்பு அல்ல. தமிழ் மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட ஒரு கூட்டு அமைப்பே அது!

அந்த வகையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆயுதக் குழுவாக செயற்பட்ட காலத்தைத் தற்போது கைவிட்டு, அப்போது நடந்தவற்றைக் கெட்ட கனவாக மறந்து இன்றைய அரசியல் நீரோட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலை ஒன்றையே முதன்மைக் கோரிக்கையாக ஏற்றுக்கொண்டு தமது கொள்கை வழியில் உண்மையாகவும் நேராகவும் நின்று செயற்பட முன் வந்துள்ளார்கள். அதனை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நல்ல காரணத்திற்காகவே நான் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எனது சம்மதத்தை தெரிவித்திருந்தேன். எத்தனை எதிர்ப்புக்கள் வந்திருந்தும் எனது கடப்பாட்டில் நான் உறுதியாக இருந்து இன்று நான் இங்கு வந்துள்ளேன்.

இன்றைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் கொண்டிருக்கின்ற எண்ணக் கருத்திற்கு ஒத்திசைவான அதே கருத்துக்களையே இக்கட்சியும் கொண்டிருக்கின்றது. அந்தக் காரணத்தினால் இந்தக் கட்சியும் எமது கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதில் பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்பதே எனது கணிப்பு. அதே நேரம் நாம் புதிதாகத் தொடங்கிய தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு வேறு சில கட்சிகளின் உறுப்பினர்கள் தமது சம்மதத்தைத் தெரிவித்த போதும் அக் கட்சிகள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அங்கத்துவக் கட்சிகளாக விளங்குகின்ற காரணத்தினால் அவர்களின் கோரிக்கையை நான் மனவருத்தத்துடன் ஆனால் முழுமையாகவே நிராகரித்து விட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பை நான் எக்காலத்திலும் சிதறடிக்கச் செய்ய மாட்டேன் என்ற எனது அப்போதைய உறுதி மொழிக்கமைவாகவே நான் அவர்களின் கோரிக்கையை மிகவும் இறுகிய கல்நெஞ்சக்காரனாக என்னை மாற்றிக் கொண்டு நிராகரித்திருந்தேன். ஆனால் தாமாகவே ஏற்கனவே வெளிவந்த கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதில் எந்தப் பிழையும் இருக்க முடியாது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் எச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் நலன்களை பாதுகாக்கின்ற ஒரு முன்னணி ஜனநாயக அரசியல் கட்சியாக மாறித் திகழ வேண்டுமென்பதே எனது விருப்பம். அதற்கேற்ற அரசியல் முதிர்ச்சியை நான் உங்கள் தலைவர்களிடம் கண்டுள்ளேன். கௌரவ சுரேஷ் பிறேமச்சந்திரன், கௌரவ சிவசக்தி ஆனந்தன், கௌரவ கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியவர்களுடன் நான் நெருங்கிப்பழகியவனாகவோ அல்லது நீண்ட நாள் அரசியல் தொடர்புகளைக் கொண்டவனாகவோ இல்லாத போதும் அவர்களின் சிந்தனைத் தெளிவு, தூரநோக்கு மற்றும் ஸ்திரமான அரசியல் முன்னெடுப்புக்களை நான் அடையாளம் கண்டுள்ளேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பிழையான வழியில் செல்கின்றது என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து துணிச்சலுடன் அதில் இருந்து வெளியேறி காத்திரமான முறையில் எதிர்ப்பு அரசியல் ஆற்றியமையை குறிப்பிடலாம். அரசியல் காரணங்களுக்காக ஒரு கட்சி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பூதக் கண்ணாடி கொண்டு நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அவ்வாறு செய்வதால் அவர்களுக்கென நேச அணிகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கின்றது.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் கொண்டிருந்த அடிப்படைக் கருத்து இன்றைய புதிய அரசியல் சூழ் நிலையின் கீழ் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்களால் நிறைவேற்றப்படுவதற்கான ஆயத்த வேலைகள் இடம் பெறுவதையிட்டு நான் உவகை அடைந்தேன்.

இது இவ்வாறிருக்க எமது மக்களுக்கு தனி சிங்கள சட்டம் , பயங்கரவாத தடை சட்டம், எமது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் 6வது திருத்தச் சட்டம் போன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை இயற்றிய இலங்கை பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைப்பதற்கும் இலங்கையின் நீதித்துறைக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் முரண்பட்டு உழைத்த அளவுக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ அல்லது காணாமல் போன மக்களின் உறவினர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ அல்லது வட கிழக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்றுவதற்கோ அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கோ நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தோன்றவில்லை என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. எமது கட்சிகள் எம் தமிழ் மக்களின் நீண்டகால நலனுக்காகத் தொடங்கப்பட்டவை என்பதை நாம் என்றென்றும் மறத்தலாகாது. குறுகிய கால நன்மை கருதி எமது நீண்ட கால விமோசனத்தை நாம் கோட்டை விட்டோமானால் வருங்கால எமது இனத்தவர்கள் எம்மைச் சபிப்பார்கள்.

எம்மை பொறுத்தவரையில் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுமே எமக்கு எதிரான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் ஏட்டா போட்டியாகவே செயற்பட்டு வந்திருக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளுடனும் ஆதரவாகச் செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றைக் பெற்றுவிடலாம் என்ற எமது தலைவர்கள் கடந்த காலங்களில் ஏமாந்து போன வரலாறுகளில் இருந்து எதனையும் நாம் கற்றுக்கொள்ளவில்லை போல்த் தெரிகின்றது. அல்லது கற்றுக்கொண்டும் எமது தனிப்பட்ட இலாபங்களுக்காக அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றோம் என்று எண்ண வேண்டியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வருவதற்கு தலை கீழாக நின்று பாடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக மட்டும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுவிட முடியும் என்று நம்புகின்றதா? எமது மக்களின் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கோ, காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணைகள் நடத்த வலியுறுத்தவோ, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கோ இன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தினால் மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய தேசிய கட்சியை விமர்சனம் செய்ய வாய்ப்பாக அது அமைந்து விடும் என்ற காரணத்துக்காகவே மௌனிகளாக இருக்கவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கின்றது. இதுவா பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து தமிழ் மக்களுக்கு நாம் பெற்றுக்கொடுத்துள்ள நன்மை? இதற்காகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ?

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் பல ஆபத்துக்கள் பற்றி மூடி மறைக்கப்பட்டுள்ளன. பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு சமஷ்டி முறைமை மறுக்கப்பட்டுள்ளது. என்றென்றைக்கும் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்புக்கு நாம் போராடிவரும் நிலையில் தமிழர் தாயகம் துண்டாடப்படுவதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினுடாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் இருந்த வட – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற பந்தி புதிய அரசியல் அமைப்பு வரைவில் இருந்து கபடத்தனமாக நீக்கப்பட்டு “அருகருகே உள்ள எந்த மாகாணங்கள் விரும்பின் இணைய முடியும்” என்ற வாசகம் உட்புகுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் மணலாறை ஊடறுத்து முல்லைத்தீவின் கரையை நோக்கி மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் விரைவுபடுத்தப்படுவதுடன் அத்துண்டை வருங்காலத்தில் வடமத்திய மாகாணத்துடன் இணைப்பதற்கும் முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிய வருகின்றன. இதன் மூலம் வடக்கும் கிழக்கும் நிலத்தொடர்பற்ற மாகாணங்களாக எதிர்காலத்தில் மாற்றப்பட்டு புதிய அரசியல் அமைப்பின்படி எக்காலத்திலும் அவற்றின் இணைப்பு சாத்தியமற்றது என்ற நிலைமை உருவாக்கப்படவிருக்கின்றது. அத்துடன் அருகருகே உள்ள மாகாணங்கள் இணைக்கப்படலாம் என்பதனூடாக வடமத்திய, மத்திய, தென் மாகாணங்களுடன் கிழக்கை இணைக்கும் வாய்ப்பும் இப்புதிய அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆபத்துக்களே தமிழ் தேசிய கூட்டமைப்பின் “சாணக்கிய அரசியலினால்” உத்தேச அரசியல் அமைப்பினுடாக எமக்கு கிடைக்கப்போகின்றன.
புதிய அரசியலமைப்பு என்பதே ஒரு நாடகம். தீர்வுக்கான முயற்சி என்ற இந்த நாடகத்தின் மூலம், எமது அடிப்படைக் கோட்பாடுகளை எம்மைக் கைவிடச் செய்வதன் மூலம், தீர்வே வேண்டியதில்லை என்ற ஒரு நிலையினை உருவாக்குவதே இந்த தீர்வு முயற்சியின் நோக்கமாக இருக்கிறது. அதாவது எமது அடிப்படைகளைப் புறக்கணித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த புதிய அரசியல் யாப்புக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. சமஷ்டி வேண்டாம், வடகிழக்கு இணைப்பு வேண்டாம், பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம், சுயாட்சி தேவையில்லை என்று நாம் கூறுவதாக இருந்தால் பின் வேறெந்தத் தீர்வை நோக்கி நாம் பயணிக்கின்றோம்? மாகாண சபைகளுக்கு ஆளுநரிடம் இருந்து சில அதிகாரங்களை வழங்குவதற்காகவா?

இந்த நாடகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு விரைவில் ஏதாவது கிடைக்க வேண்டும் தமது அரசியலைப் பாதுகாக்க. அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குக் கவலை இல்லை போலத் தெரிகின்றது.
அரசாங்கங்களைப் புறக்கணித்து வெளியில் இருந்து எமக்கான தீர்வினைக் கொண்டுவரலாம் என்று நான் உபதேசம் செய்யவில்லை. ஆனால், எமக்கான ஒரு நியாயமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு அழுத்தங்கள், இந்தியா, ஐ. நா மற்றும் சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்கள் அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கங்களுடன் நாம் முட்டி மோதிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், எமக்கு கிடைக்க வேண்டிய நியாயம், உரிமைகள் என்பவற்றுக்காகவும், அடக்கு முறைகளுக்கு எதிராகவும் நாம் தொடர்ந்து அரசியல் ரீதியாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் போராடவேண்டும். இவற்றுள் ஒன்று ஐ. நா மனித உரிமைகள் சபை. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முக்கியமானது. இதனை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் . ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தத் தீர்மான நிறைவேற்றாமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தை காப்பாற்றும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகத் தோன்றுகின்றது. அரசாங்கம் எதனையோ தருவார்கள் என்ற நப்பாசை அவர்களைக் கவ்வியுள்ளது.

ஆகவே, இந்த ஆபத்துக்களை நாம் உடனடியாக தடுக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எதிர்வரும் தேர்தல்களின் மூலம் இந்த ஆபத்துக்களை முறியடிக்கும் வகையில் எமது மக்களை நாம் தயார்படுத்த வேண்டும். இதற்காக ஒத்த கொள்கையுடைய அனைவரும் வேற்றுமைகளையும் கட்சிநலன்களையும் புறந்தள்ளி இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டிணைவை சாத்தியம் இல்லாமல் செய்யும் வகையில் பல்வேறு சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எம்மை எமக்குள்ளேயே முட்டிமோதவைத்து பலவீனமடையச் செய்ய முயலுகின்றார்கள். ஊடகங்களையும் இதற்கு பயன்படுத்திக்கொள்கின்றார்கள். “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பதுபோல, கொள்கையின்பால் ஒன்றானவர்கள் ஒன்றுதிரண்டால் நாம் எமது இலக்கை அடையும் வழிகளை இலகுபடுத்திக்கொள்ளலாம். போகும் வழியில் எம்மவரே எமக்குக் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டால் எமது பயணம் தடைப்படும்.

எனவே அன்பார்ந்த உறுப்பினர்களே, பொது மக்களே! நாம் அனைவரும் எமது பல்வேறு கடமைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் முன்னெடுப்புக்களில் முழுமையாக ஈடுபடுகின்றோம் என்றால் அது எம்மை வளப்படுத்துவதற்கோ அல்லது தேட்டங்களை தேடிக்கொள்வதற்காகவோ அல்ல. நான் வேண்டுமெனில் வெளிநாடு சென்று சொகுசான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். எமது மக்களின் நிலை கண்டே உங்களுடன் நின்று போராட முன்வந்துள்ளேன். இலங்கைக்குள் சகல உரிமைகளுடன் கூடிய தமது இனத்தைத் தாமே ஆளக் கூடிய சுய நிர்ணய உரிமைகளைக் கொண்ட வட கிழக்கைச் சேர்ந்த ஒரு இனமாக தமிழ் இனம் வாழ வேண்டும், அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபட வேண்டும் என்ற அவாவில்த் தான் நான் இன்றும் இங்கிருந்து போராடி வருகின்றேன். இதற்கு உங்கள் யாவரதும் ஆதரவு என்றும் கிடைக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்டு இத்துணை நேரம் பொறுமையாக இருந்து கேட்ட உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்தும் வளர்ச்சிப் பாதையில் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.