கடத்தல் மன்னன் `கடல்புறா' கைது!!

பல்வேறு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த கடல் புறா என்றழைக்கப்படும் கடத்தல் ஆசாமி  தனுஷ்கோடி போலீஸாரிடம் சிக்கினார்.


ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கஞ்சா மற்றும் பீடி இலைகள் கடத்திச் செல்வது சமீப காலமாக அதிகளவில் நடந்து வருகிறது. சில நேரங்களில் இவை போலீஸார் மற்றும் புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கி வருகிறது. கடந்த வாரம் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே அமைந்துள்ள 3-ம் மணல் திட்டில் சுமார் 900 கிலோ பீடி இலைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் கைப்பற்றினர். இந்த நிலையில், நேற்று அதிகாலை தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ கஞ்சாவை தனுஷ்கோடி போலீஸார் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு மேலும் 10 கிலோ கஞ்சா பார்சல் கைப்பற்றப்பட்டது.

இதனிடையே இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தனுஷ்கோடி பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனுஷ்கோடி போலீஸார்  சார்பு ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தியதில் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் பிடிபட்டார். போலீஸ் விசாரணையின்போது, தான் மீன்பிடிக்க வந்ததாகவும் படகு கடலில் கவிழ்ந்து போனதால் நீந்தி கரை சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதன் பின்னர் போலீஸார் தங்கள் பாணியில் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஜெயசீலன் ஈடுபட்டதும், இதற்கு சுங்கத்துறையைச் சேர்ந்த சிலரே உதவியாக இருந்ததும் தெரிய வந்தது.

சுங்கத்துறையினரின் வழிகாட்டுதலுடன் கடத்தலில் ஈடுபடும் ஜெயசீலன் தனக்கு எதிராக கடத்தலில் ஈடுபடும் கும்பல் குறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்து மாட்டிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருப்பதும் விசாரணையின்போது வெளியாகி உள்ளது. கடந்த 10-ம் தேதி  கஞ்சாவைக் கடத்திச் செல்ல படகில் வந்த ஜெயசீலன் அப்பகுதியில் வந்த இந்திய கடற்படை ரோந்துப் படகைக் கண்டதும் கடலில் குதித்துத் தப்பி வந்து தனுஷ்கோடியில் பதுங்கியிருந்துள்ளார். இதையடுத்து, ஜெயசீலனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயசீலன் மீது மண்டபத்திலிருந்து கஞ்சா கடத்த முயன்ற வழக்கு ஒன்று உள்ள நிலையில், போலீஸாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். கடத்தல் சம்பவங்களில் துணிச்சலாக ஈடுபடும் ஜெயசீலன் ரோந்து வரும் கடற்படையினரைக் கண்டால் கடலில் குதித்துத் தப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடலில் எவ்வளவு தூரமாக இருந்தாலும் நீந்தியே கரைக்குச் சென்று தப்பி விடுவாராம். இதனால் ஜெயசீலனுக்கு `கடல் புறா' என்ற அடைமொழி பெயரும் ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.