சூரிய மின்கல நீர்ப்பாசனத் திட்டம் கிழக்கில் முதன்முறையாக ஆரம்பம்!!

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சூரிய மின்கலம் மூலம் ஏற்று நீர்ப்பாசன திட்டம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு, களுதாவளையில் இந்த புத்தாக்க முறையிலான சூரிய சக்தியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசன திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் செ.திலகராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய, நீர்பாசன, காலநடை உற்பத்தி, மீன்பிடி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரட்னம், மட்டக்களப்பு மாவட்ட பிரதி நீர்ப்பாசனத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் வே.இராஜகோபாலசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகசபை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டதுடன் நீர்ப்பாசனத் திட்டமும் அதிதிகளினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ஏற்று நீர்பாசன திட்டம் மூலம் விவசாயிகளும் தோட்ட செய்கையாளர்களும் மிகவும் நன்மையடையவுள்ளதுடன் நீர்ப்பாய்ச்சல் செலவும் குறைக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாவியில் இருந்து வரட்சியான காலப்பகுதியில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் மூலம் நீரைப் பெற்று களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள பெரியகுளத்தில் நீரை சேமிக்கச்செய்து அதன் மூலம் விவசாய செய்கைகளுக்கு நீரை வழங்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரட்சியான காலப்பகுதியில் இப்பகுதியில் நீரைப்பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிவருவதுடன் விவசாய செய்கையினை ஒரு குறித்த காலப்பகுதியில் மட்டும் செய்கைபண்ணும் நிலையிருந்துவருகின்றது.

எனினும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் மூலம் இப்பகுதியில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிகமான காணிகளில் நெற்செய்கை செய்யமுடிவதுடன் நெற்செய்கைக் காலம் தவிர்ந்த காலத்தில் உப உணவு பயிர்ச்செய்கையினையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன்மூலம் விவசாயிகள் தொடர்ச்சியாக நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.