`என்னை நுழையவிடாமல் தடுத்த அந்த மைதானத்துக்குள் செல்வேன்!'- ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர், ஸ்ரீசாந்த். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின்போது, இவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸ், ஸ்ரீசாந்த்தை கைதுசெய்தது. இதனால், பி.சி.சி.ஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், `ஸ்ரீசாந்த்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை' எனக்கூறி விடுவிக்கப்பட்டாலும், அவரின் மீதான வாழ்நாள் தடையை மட்டும் பி.சி.சி.ஐ நீக்கவில்லை. ஆனால், பி.சி.சி.ஐ-யின் முடிவுக்கு எதிராகக் கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் முடிவில், ஸ்ரீசாந்த்துக்கு ஆதரவாகக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஸ்ரீசாந்த்
நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பி.சி.சி.ஐ மேல்முறையீடு செய்தது. அப்போது பி.சி.சி.ஐக்கு ஆதரவாகத் தீர்ப்பு வர ஸ்ரீசாந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீண்ட நாள்களாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோஸப் அளித்த தீர்ப்பில், ``ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிடுகிறோம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவர் மீதான தண்டனையை குறைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். புதிய பரிசீலனைகள் குறித்து நீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ அமைப்புதெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். 
ஸ்ரீசாந்த்
தீர்ப்பு குறித்து பேசியுள்ள ஸ்ரீசாந்த், ``உச்ச நீதிமன்றம் எனக்குத் திரும்பவும் உயிர் கொடுத்துள்ளது. இந்தத் தீர்ப்பு இழந்த என் கௌரவத்தை மீட்டெடுக்க உதவியாக உள்ளது. இனிமேல் எனது பிராக்டீஸை தொடங்குவேன். விரைவில் கிரிக்கெட் களத்தில் என்னைப் பார்க்க முடியும் என நம்புகிறேன். ஆறு வருடம் காத்திருந்துள்ளேன். என்னுடைய வாழ்க்கையாக இருந்த கிரிக்கெட்டை இந்த ஆறு வருடம் விளையாட முடியவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு என்ன வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்பது தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பி.சி.சி.ஐ. மதிக்கும் என நம்புகிறேன். குறைந்தபட்சம் கிரிக்கெட் களத்துக்குள் நுழைவதற்காகவாது எனக்கு அனுமதி கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இந்த தீர்ப்புக்குப் பிறகாவது என்னை நுழைய விடாமல் தடுத்த மைதானத்துக்குள் செல்ல முடியும். வயது ஒரு பிரச்னையாக இருந்தாலும் ஸ்காட்லாண்டில் நடைபெறும் கிளப் போட்டிகளில் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். கடந்த வருடமே விளையாடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை" என்றவரிடம், இந்தத் தீர்ப்பு குறித்து குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீசாந்த்
அதற்கு, ``நிச்சயம் இத்தனை நாள்கள் வாழ்வின் கறுப்பு நாள்கள் தான். இந்தத் தீர்ப்புக்காக என் மீது விசுவாசம் வைத்து என் மனைவி, பெற்றோர்கள் உட்பட்டவர்கள் காத்திருந்தனர். அனைவருக்கும்  நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். முக்கியமாக என் மாமனார் குடும்பத்துக்கு. இந்த உலகமே என் மீது நம்பிக்கை இல்லாமல் பேசிக்கொண்டிருந்தபோது என் மீது நம்பிக்கை வைத்து அவர்களது மகளை மணமுடித்து வைத்தார்கள். இத்தனை ஆண்டுகள் நம்பிக்கையுடன் காத்திருப்பது எளிதான விஷயமல்ல. இந்தக் காலகட்டத்தில் நிறைய பாடங்களை என் பெற்றோர்கள் உட்பட நாங்கள் அனைவரும் கற்றுக்கொண்டோம். என் குடும்பத்தின் நம்பிக்கைக்காகவே மீண்டும் கிரிக்கெட் விளையாட முடிவு செய்துள்ளேன்" என உருக்கமாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.