“திக் திக் நிமிடங்கள்... உறக்கமில்லா இரவு அது” - விவரிக்கும் தமீம் இக்பால்!!

“உறக்கமில்லா இரவுகள் அது... உயிர் பயத்தை கண்களில் காட்டிய தருணம் அவ்வளவு எளிதில் அதை மறக்க முடியாது” என நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருந்து தப்பிய அந்த சில விநாடிகள் குறித்து பங்களாதேஷ் வீரர் தமீம் இக்பால் பேசியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்த போது  கிறைஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் அந்த கொடுரமான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. மசூதியில் நடக்கும் தொழுகையில் பங்கேற்பதற்காக வங்கதேசம் வீரர்கள் சென்றனர். சில காரணங்களில் அவர் நினைத்த நேரத்திற்கு மசூதிக்கு செல்ல முடியவில்லை. அந்த தாமதத்தினால் தான் அவர்கள் இன்று உயிரோடு உள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து வங்கதேசம் அணி வீரர்கள் தாயகம் திரும்பினர்.

நியூசிலாந்து துப்பாக்கி சம்பவம் குறித்து ESPN Cricinfo-க்கு தமீம் இக்பால் அளித்துள்ள பேட்டியில், “ முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா இருவரும் மதபிரசாரங்கள் தவறாமல் கேட்பார்கள். இதன் காரணமாகவே நாங்கள் மசூதிக்கு விரைவாகச் செல்ல திட்டமிட்டோம். நாங்கள் சரியாக மதியம் 1.30 மணிக்குப் பேருந்தில் இருந்து புறப்படுவது என முடிவு செய்தோம். எங்களுக்கான பேருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வந்தது. ஆனால் அதற்குள் மஹமுதுல்லா செய்தியாளர்கள் சந்திப்பு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் அவருக்காகக் காத்திருந்தோம். மைதானத்தில் இருந்து புறப்பட்டு தொழுகையை முடித்துக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம். செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு அவர் நேராக ஓய்வறைக்கு
வந்துவிட்டார்.

ஓய்வறையில் நாங்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். தைஜூல் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். கால்பந்தில் நாங்கள் அனைவரும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. தொடர்ந்து மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார். அது மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருந்தது.  தைஜூலும் முஷ்பிகுர் ரஹிம் ஒத்தைக்கு ஒத்தையாக மல்லுக்கட்டினார். இதில் நீண்ட நேரம் பிடித்துவிட்டது. இதுபோன்ற சிறு சிறு விஷயங்கள் தான் எங்களைக் காப்பாற்றியது.

இதனையடுத்து நாங்கள் பேருந்தில் மசூதிக்குப் புறப்பட்டோம். தொழுகையை முடித்துக்கொண்டு விடுதிக்குத் திரும்புவதால் எங்களுடன் டீம் அனலிஸ்ட் ஸ்ரீநிவாஸ், சவுமியா சர்க்கார் இருவரும் வந்தனர். பேருந்தில் எப்போதும் நான் இடதுபுறத்தில் 6-வது இருக்கையில் தான் அமருவேன். பேருந்து மசூதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது வலதுபுறத்தில் அமர்ந்திருந்தவர் ஜன்னல் வழியாகச் சாலையில்
எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சாலையில் படுத்துக்கிடந்தார். குடித்துவிட்டு சாலையில் மயங்கிக் கிடக்கலாம் என நினைத்தோம். பேருந்து மசூதியை அடைத்தது. ஆனால் எங்கள் கவனம் எல்லாம் சாலையில் படுத்துக்கிடந்தவர் மீது தான் இருந்தது. ஒரு கனம் நான் திரும்பிய போது எனக்கு எதிர்த்திசையில் ஒருவர் ரத்தக்காயங்களுடன் சாலையில் கிடப்பதை கண்டேன். அந்த
கணமே நான் பீதியடைய தொடங்கிவிட்டேன்.

மசூதிக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே நாங்கள் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டது. எங்கள் பேருந்து ஓட்டுநர் மசூதிக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பேச்சுக்கொடுத்தார். அந்தப்பெண் பதற்றமாகவும் நடுக்கத்துடனும் காணப்பட்டார்.  அங்கு யாரோ துப்பாக்கியால் சுடுகிறார்கள், அங்குப் போக வேண்டாம்.. போக வேண்டாம் என்றார். பேருந்து ஓட்டுநர் இவர்கள் மசூதிக்கு தான் வந்துள்ளனர் என்றார். வேண்டாம்.. வேண்டாம்... மசூதிக்குப் போக வேண்டாம்.. அங்கு தான் துப்பாக்கியால் சுடுகிறார்கள் என்றார். அவரது பயத்தின் காரணமாக அழுதுகொண்டிருந்தார். நாங்கள் பேருந்தில் இருந்து அந்தப்பெண்மணியை கண்டோம். எங்களுக்கு அந்த நொடி பயம் தொற்றிக்கொண்டது. எங்கள் பேருந்து மசூதிக்கு நடந்து செல்லும் தொலைவில் தான் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது நாங்கள் கண்ட காட்சி எங்களை மேலும் பதற்றமாக்கியது. மசூதியின் வாசலில் ரத்த கரைகளுடன் சில உடல்கள் கிடந்தன. அந்த தருணத்தை இப்போது நினைத்தாலே எனக்குப் பேச்சு எல்லாம் குளறுகிறது. சல்வார் அணிந்திருந்த சிலர் அதன் மீது மற்றொரு ஆடையை அணிந்துகொண்டார்கள். நாங்கள் பேருந்தின் இருக்கையை விட்டு இறங்கி கீழே படுத்துக்கொண்டோம். சுமார் 8 நிமிடங்கள்
நாங்கள் அப்படியே இருந்திருப்போம்.

பேருந்து ஓட்டுநரிடம் இங்கிருந்து சென்று விடலாம். எதாவது செய்யுங்கள் என்றோம். ஆனால் அவர் நாங்கள் சொல்வதை செவிகளில் வாங்கியதாகத் தெரியவில்லை. நாங்கள் அவரிடத்தில் சத்தம் போட்டோம். 6 நிமிடங்கள் அங்கு போலீஸார் யாரும் வரவில்லை. தீடிரென போலீஸார் அங்கு வந்தார். சிறப்பு அதிரடிப்படையினர் மசூதிக்குள் சென்றனர். கடுமையான ரத்த காயங்களுடன் மசூதிகளில் இருந்து சிலர் வெளிவரத் தொடங்கினர். என்னுடைய மொத்த உடலும் உரைந்து போய் இருந்தது. எங்களுடைய உணர்ச்சிகளை அந்தச் சமயத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை. நாம் பேருந்துக்குள் இருப்பது ஆபத்தானது. நாம் சுலபமாக சுடப்படுவோம் என்று எல்லோரும் கூறினார். பேருந்தில் இருந்து வெளியேறுவது தான் தப்பிப்பதற்கான வழி என நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்குச் செல்வது. பேருந்தின் கதவுகள் மூடப்பட்டுள்ளது. ஓட்டுநர் கதவை திறப்பதாக இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நாங்கள் பேருந்தின் கதவுகளைத் தட்டத்தொடங்கினோம்.

ஓட்டுநர் பேருந்தை ஒரு பத்து அடி முன்னால் நகர்த்தினார். அவர் ஏன் அவ்வாறு செய்தார் என எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் எங்கள் பொறுமையை இழந்த தருணம் அது. பேருந்தின் கதவுகளை நாங்கள் அனைவரும் பலமாக தட்டினோம். ஓட்டுநர் கதவுகளை திறந்தார். பேருந்தில் இருந்து வெளியில் வருவதற்கே 8 நிமிடங்கள் ஆனது. எங்களுக்கு முன்பாக இருந்த பூங்காவிற்குள் ஓடி தப்பி விடலாம் என்றனர். அப்போது ஒருவர் அது தவறான முடிவு என்றார். பூங்காவில் நாம் ஓடினால் சுலபமாக தாக்கப்படலாம். நாங்கள் எடுத்து வந்த பைகளுடன் ஓடினால் காவல்துறையினர் எங்களை என்ன நினைப்பார்கள்.

மரணத்தைக் கண்களில் பார்த்த தருணம் அது. அதனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நாங்கள் விடுதிக்குச் சென்றது ரியாத் அறையில் இருந்த டிவியில் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோவை கண்டோம். நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இதில் இருந்து விடுபட எங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும். குடும்பத்தினர் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். எங்களுக்கு கவுன்சிலிங் தேவை. நான் கண்களை மூடினாலே அந்தக் காட்சிகள் தான் நிழலாடுகிறது. அந்த இரவு நாங்கள் தனியாக உறங்கவில்லை. வீரர்கள் அனைவரும் ஒன்றாகத் தான் உறங்கினோம். கனவுகளில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சுடுவதை போல் இருக்கிறது.

நாங்கள் விமானநிலையத்திற்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் குறித்துப் பேசினோம். சில விநாடிகள் தான் நான் பிணமாகி இருப்போம். சொந்த நாட்டிற்கு உயிரோடு சென்றிருக்க முடியாது என்று பேசிக்கொண்டோம்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.