எவரெஸ்ட் பாதைகளில் திடீரென தென்படும் மனித உடல்கள்..??

இலையுதிர் காலத்தில் பொதுவாக பனிப்பாறைகள் உருக ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு உருகுதலின் விகிதம் அதிகமாவதால், எவரெஸ்ட் மலைப்பகுதிகளில் உயிரிழந்தோரின் உடல்கள் அதிகமாக வெளிவரத் துவங்கியுள்ளன. இதுவரை மலையேறிவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உடலானது எவரெஸ்ட் சிகரத்திலேயே இருக்கிறது. அவற்றில் பெரும்பாலான உடல்கள் பனிப்பாறைகள் உருகுவதால் வெளியில் வருகின்றன. சீனா தன் பக்கம் இருக்கும் உடல்களை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பொதுவாகப் பனியில் பல வருடங்கள் புதைந்திருக்கும் உடலானது, வெளி வரும்போது அதிலிருந்து மீத்தேன் வாயு அதிகமாக வெளியாகும். அந்த மீத்தேன், கார்பன் டை ஆக்ஸைடை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். இத்தனை வருடங்களாக புதைந்து வெளிவந்து கொண்டிருக்கும் உடல்களில் இருந்து வெளியாகும் மீத்தேனும் சுற்றுப்புறச்சூழலில் அதிகமான தாக்கத்தை உண்டாக்கும். எவரெஸ்ட் சிகரத்தில் வேலை செய்யும் நேபாள அதிகாரி ஒருவரே இதுவரை 10 உடல்கள் வரை எடுத்திருக்கிறார். இப்போது இன்னும் அதிகமான உடல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக அவரே குறிப்பிடுகிறார்.

நேபாள அதிகாரிகள் தன் பக்கம் இருக்கும் பனிப்பாறைகளில் சிக்கியுள்ள உடல்களை எடுக்கும் பணிகளில் கூடாரம் அமைத்துச் செயல்பட்டு வருகிறார்கள். பனியில் இறந்த உடல்களை எடுத்து வருவது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் அல்ல. ஆனால், நேபாள அரசு இறந்த உடல்களை அகற்றுவதில் சரியாக செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு நிறுவனங்களும், அரசாங்கங்களும் உதவ வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். திபெத் பக்கம் இருக்கும் பனிப்பாறை பகுதிகளில் இறந்த உடல்களை எடுக்கும் பணியில், அந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவாலும் செய்ய முடியும், ஆனால் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை.

2017-ம் ஆண்டில், நேபாளப் பகுதியில் மலையேற்ற வீரரின் கை தெரிந்தது. அதை ஷெர்பா எனும் பழங்குடியின மக்களின் உதவியோடு மீட்டு, அந்த உடல் மேலிருந்து கீழே எடுத்து வரப்பட்டது. அதே ஆண்டில் மற்றொரு உடல் எவரெஸ்ட் சிகரத்திலுள்ள கும்பு பனிப்பாறையின் மீது கிடந்தது. கும்பு பனிப்பாறைகளை பனியாறுகள் எனவும் அழைப்பதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் வழிந்த நீரானது அதிக அடர்த்தியுடன் பனிக்கட்டியாக உறைந்திருப்பதுதான் அதற்குக் காரணம். இந்தப் பகுதியில் பனிக்கட்டிகள் உருக ஆரம்பித்திருப்பதால் ஆங்காங்கே உடல்கள் தெரிவதாக மலையேறுபவர்கள் தெரிவிக்கின்றனர். தென் கோல் என்று அழைக்கப்படும் நான்காவது கேம்ப்பிலும் பல சடலங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வெளிவரும் உடல்கள் அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.